| ADDED : மே 03, 2024 12:11 AM
திண்டிவனம் : நாகலாபுரம் பகுதியில் கல்வெர்ட்டில் தடுப்புச் சுவர் இல்லாததால் பைக்கில் வந்த கணவன், மனைவி வாய்க்காலில் விழுந்து காயமடைந்தனர்.திண்டிவனம், நாகலாபுரம் கல்வெர்ட் வழியாக கிடங்கல் ஏரி தண்ணீர் செல்லும் வெள்ளவாரி வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்காலில் உள்ள கல்வெர்ட் தடுப்புச் சவர் இடிந்து விழுந்து 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால், கல்வெர்ட்டின் இருபுறமும் திறந்த வெளியாக உள்ளது. இந்த கல்வெர்ட் வழியாக பைக் உள்ளிட்ட வாகனங்களில் செல்பவர்கள் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. கல்வெர்ட்டை சீரமைக்கக்கோரி நகராட்சி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தும் இதுவரை நடவடிக்கை இல்லை.இந்த பாலத்தின் வழியாக இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் அடிக்கடி உள்ளே விழுந்து காயமடைந்து வருவது தொடர்கிறது.நேற்று பிற்பகல் 1:00 மணியளவில் திண்டிவனம் அடுத்த ஆதனப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பிரவீன்குமார், 25; இவர் தனது மனைவி தீபிகாவுடன், 21; பைக்கில் கல்வெர்ட் வழியாக வந்தனர்.அப்போது அந்த வழியாக இரும்பு பைப் ஏற்றி வந்த ஆட்டோ, பைக் மீது உரசியது. இதில் கணவன், மனைவி இருவரும் பைக்குடன் வாய்க்காலில் விழுந்தனர்.காயமடைந்த இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பெரிய அளவில் விபத்து ஏற்படும் முன் அதிகாரிகள் தரைப்பாலத்தின் இரு பக்கமும் தடுப்புச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.