விழுப்புரம்: விழுப்புரம் கிளைச் சிறையில் விசாரணை கைதி இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.விழுப்புரம் ஜி.ஆர்.பி. தெருவைச் சேர்ந்தவர் நாகமுத்து மகன் அற்புதராஜ், 33; ஆட்டோ டிரைவர். திருமணமாகவில்லை.இவர், கடந்த 2016ம் ஆண்டு, திருச்சி சாலையில் உள்ள டாஸ்மாக்கடைக்குச் சென்றவர், அங்கு மதுபாட்டில்களை திருடியதாகவும், தட்டிக்கேட்ட விற்பனையாளர் செந்தில்குமார் உள்ளிட்டோரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த புகாரில், விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.இவ்வழக்கு விசாரணைக்கு, விழுப்புரம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து ஆஜராகாததால், அவருக்கு கடந்த மே மாதம் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.அதன்பேரில் அற்புதராஜை நேற்று முன்தினம் விழுப்புரம் மேற்கு போலீசார் கைது செய்து, மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியபின், மாஜிஸ்திரேட் கோர்ட்டி்ல ஆஜர்படுத்தி, விழுப்புரம் கிளைச் சிறையில் அடைத்தனர்.இந்நிலையில் நேற்று காலை 6:00 மணிக்கு, சிறையில் இருந்த பிற விசாரணை கைதிகள் எழுந்த நிலையில், அற்புதராஜ் எழுந்திருக்கவில்லை. சிறை காவலர்கள் சென்று பார்த்தபோது, அவர் மயங்கி நிலையில் இருந்தார். உடன் அவரை விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே இறந்துவிட்டதை உறுதி செய்தனர்.விழுப்புரம் டவுன் போலீசார், கிளை சிறையில் விசாரணை நடத்தினர். பின்னர், அரசு மருத்துவமனையில் இருந்த அற்புதராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கிளைச் சிறை கண்காணிப்பாளர் நைனார் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.இது குறித்து போலீசார் கூறுகையில், 'பிரேத பரிசோதனை முடிவுக்குப் பிறகே அவர் இறந்ததற்கான முழு விபரமும் தெரியவரும்' என்றனர்.அற்புதராஜின் உறவினர்கள் கூறுகையில், 'போலீசார் தாக்கியதால் இறந்திருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.