பாதாள சாக்கடையில் அடைப்பு : மக்கள் அவதி
விழுப்புரம்: விழுப்புரம், நடேசன் நகரில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.விழுப்புரம், நடேசன் நகரில், 100க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்த நகருக்கு அருகே தனியார் பள்ளி, வணிக நிறுவனங்கள் அமைந்துள்ளது. இதனால், இந்த வழியை பொதுமக்கள், மாணவ, மாணவிகள் மற்றும் முதியவர்கள் என அனைவரும் பயன்படுத்தி செல்கின்றனர். இந்த நகரில் உள்ள பாதாள சாக்கடை கடந்த சில தினங்களுக்கு முன் அடைத்து கொண்டு கழிவுநீர் வெளியேறியது. இது பற்றி, அப்பகுதி மக்கள், நகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.இதையடுத்து, இங்குள்ள பாதாள சாக்கடை மூலம் வெளியேறும் கழிவுநீர் தற்போது கழிவுநீர் குட்டையாக மாறி, ஆங்காங்கே தேங்கி துர்நாற்றம் வீசி, சுகாதார சீர்கேடை ஏற்படுத்தியுள்ளது.இந்த வழியை கடந்து செல்ல முடியாமல் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். மக்களின் நிலையை கருத்தில் கொண்டு, நகராட்சி அதிகாரிகள் பாதாள சாக்கடை அடைப்பை துரிதமாக சரி செய்வதோடு, அங்கு தேங்கியுள்ள கழிவுநீரை அகற்றுவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.