உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / திண்டிவனம் திந்திரிணீஸ்வரர் கோவில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

திண்டிவனம் திந்திரிணீஸ்வரர் கோவில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

திண்டிவனம் திந்திரிணீஸ்வரர் கோவிலில் உள்ள ஆக்கிரமிப்புகளை ஆறு வாரங்களில் அகற்ற வேண்டுமென, ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்திலுள்ள திந்திரிணீஸ்வரர் கோவில் ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்தது. சோழமன்னர்களால் கட்டப்பட்ட இக்கோவில் புனரமைக்கப்பட்டு குடமுழுக்கு நடத்த பணிகள் நடந்து வருகிறது.இந்நிலையில், மதுராந்தகம் வட்டம், சோத்துப்பாக்கத்தை சேர்ந்த ராஜா என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்தார். மனுவில், திந்திரிணீஸ்வரர் கோவிலின் உட்பிரகார சுவற்றின் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் உள்ள பண்டைய கல்வெட்டுகளை மறைக்கும் வகையில் நீல நிற பூச்சுகளும், சிவப்பு மார்பிள் கற்கள் ஒட்டப்பட்டுள்ளது. கோயில் தீர்த்தக்குளத்தின் நான்கு கரைகளிலும் 50க்கும் மேற்பட்ட வீடுகள், கடைகள் கட்டப்பட்டு, ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. கோவில் கல்வெட்டுகளில் உள்ள வண்ண பூச்சுகள், சிவப்பு மார்பிள்களை அகற்றி, கோவிலையும் குளத்தையும் பழமை மாறாமல் புதுப்பித்து இந்திய தொல்லியல் துறையிடம் ஒப்படைக்க வேண்டும்' என கூறியிருந்தார்.இந்த மனு ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி அமர்வில் கடந்த 5ம் தேதி விசாரணைக்கு வந்தது.இந்து சமய அறநிலைய துறை சார்பில் ஆஜரான அரசு கூடுதல் வழக்கறிஞர் ரவிச்சந்திரன், 'கல்வெட்டுகள் மேல் உள்ள சிவப்பு கிரானைட் கற்களையும் மற்றும் வண்ண பூச்சுகளையும் அகற்ற உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அவற்றை சரிசெய்த பின்னரே கும்பாபிஷேகம் நடைபெறும்' என தெரிவித்தார். இதை பதிவு செய்த நீதிபதிகள், கல்வெட்டுகள் மேல் உள்ள சிவப்பு கிரானைட் கற்கள் மற்றும் வண்ண பூச்சுகளை 6 வாரத்திற்குள் அகற்றிட வேண்டும். தீர்த்த குளத்திலுள்ள ஆக்கிரமிப்புகளை மாவட்ட கலெக்டர் தலைமையிலான மாவட்ட கண்காணிப்பு குழுவினர், 6 வாரங்களில் அகற்றி அதன் விவரங்களை கோர்ட்டில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை 6 வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஸ்ரீ வெங்கடேஷ் ஆஜரானார். -நமது நிருபர்-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை