விழுப்புரம் மண்டலத்தில் 202 மினி பஸ்களுக்கு அனுமதி; துணை ஆணையர் தகவல்
விழுப்புரம்; 'விழுப்புரம் மண்டலத்தில், புதிதாக 202 மினி பஸ்கள் இயக்கப்படும்' என, போக்குவரத்து துறை துணை ஆணையர் பாட்டப்பசாமி தெரிவித்தார்.நேற்று அவர், நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில், சென்னை மாநகரம் தவிர மற்ற மாவட்டங்களில் புதிதாக மினி பஸ்கள் இயக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் 69 மினி பஸ்கள் இயக்கப்படுகிறது. தற்போது புதிதாக 100 வழித்தடங்கள் கண்டறியப்பட்டு, 67 புதிய வழித்தடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.ஏற்கனவே இயக்கப்படும் மினி பஸ்களில் 23 வழித்தடங்கள் மாற்றி அமைக்க மனு செய்யப்பட்டுள்ளது.கடலுார் மாவட்டத்தில் ஏற்கனவே 95 மினி பஸ்கள் இயக்கப்படுகிறது. தற்போது புதிதாக 60 வழித்தடங்கள் கண்டறியப்பட்டு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஏற்கனவே, இயக்கப்படும் மினி பஸ்களில் 24 வழித்தடங்கள் மாற்றி அமைக்க மனு செய்யப்பட்டுள்ளது.திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏற்கனவே 90 மினி பஸ்கள் இயக்கப்படுகிறது. தற்போது புதிதாக 73 வழித்தடங்கள் கண்டறியப்பட்டு, 32 புதிய வழித்தடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஏற்கனவே, இயக்கப்படும் மினி பஸ்களில் 33 வழித்தடங்கள் மாற்றி அமைக்க மனு செய்யப்பட்டுள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்கனவே 70 மினி பஸ்கள் இயக்கப்படுகிறது. தற்போது புதிதாக 55 வழித்தடங்கள் கண்டறியப்பட்டு, 43 புதிய வழித்தடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஏற்கனவே இயக்கப்படும் மினி பஸ்களில் 44 வழித்தடங்கள் மாற்றி அமைக்க மனு செய்யப்பட்டுள்ளது.அதன்படி, ஏற்கனவே அனுமதி பெற்று இயக்கப்படும் வழித்தடங்களில் மினி பஸ்கள் சேவை பாதிக்கப்படாமல், கூடுதலாக 5 கி.மீ., வரை நீடிப்பு செய்ய விண்ணப்பிக்கலாம்.விழுப்புரம் மண்டல போக்குவரத்து எல்லைக்குட்பட்ட விழுப்புரம், கடலுார், கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில், புதிய வழித்தடங்களில் 202 மினி பஸ்களை இயக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.முதலில் வரும் விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் அனுமதி கிடைக்கும் என்பதால், விருப்பமுள்ளோர் விரைந்து விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு பாட்டப்பசாமி கூறினார்.இந்நிலையில், திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் - அனந்தமங்கம் வழித்தடம், வெள்ளிமேடுப்பேட்டை- ரெட்டணை கூட்ரோடு மற்றும் விழுப்புரம் - பூவரசங்குப்பம் வழித்தடங்களை, போக்குவரத்து ஆணையர் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலரான சுங்சாங்கம் ஜடக் சிரு, நேரில் ஆய்வு செய்தார்.மினி பஸ் இயக்குவதற்கான வழித் தடங்களில் சாலை வசதிகளை மேம்படுத்துமாறு அலுவலர்களிடம் அறிவுறுத்தி உள்ளார்.