புயல் நிவாரணம் வழங்கக்கோரி விவசாய சங்கத்தினர் தர்ணா
விழுப்புரம்: பெஞ்சல் புயல் நிவாரணம் வழங்கக்கோரி விவசாய சங்கத்தினர் திடீர் தர்ணாவில் ஈடுபட்டதால், கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.தர்ணாவிற்கு, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் அய்யனார் தலைமை தாங்கினார். தகவலறிந்த விழுப்புரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது, விழுப்புரம் மாவட்டத்தில், பெஞ்சல் புயலால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு தொகை அரசு அறிவித்தும், இதுவரை விவசாயிகள் வங்கி கணக்கில் செலுத்தவில்லை.வானுார், கிளியனுார், நல்லாவூர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில், விவசாயிகளுக்கு பயிர் கடன் தர மறுக்கின்றனர். இதனால், விவசாயிகள் பயிர் சாகுபடி செய்யாமல் உள்ளனர்.புயலால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதால், பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு, இழப்பீடு தொகை உடனடியாக வழங்க வேண்டும்.மாவட்டத்தில் வெள்ளத்தால் கரைகள் சேதமடைந்த ஏரி, ஆறுகளை பொதுப்பணித்துறையினர் சீரமைக்க வேண்டும். வெள்ளத்தால் விளை நிலத்தில் உள்ள மண் மேடுகளை அகற்றி, வேளாண் பொறியியல்துறை மூலம் சமன் செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.இது குறித்து கலெக்டரிடம் மனு கொடுக்குமாறு போலீசார் கூறியதைத் தொடர்ந்து, போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.