திருவாமாத்துார் ஏரி வாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்ற வலியுறுத்தி விவசாயிகள் மனு
விழுப்புரம்: திருவாமாத்துார் ஏரி வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து, விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்திற்கு, விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கலியமூர்த்தி, ஏழுமலை தலைமையில் வந்த அப்பகுதி விவசாயிகள், கலெக்டரிடம் மனு அளித்து கூறியதாவது: விழுப்புரம் அருகே உள்ள திருவாமாத்துார் கிராம பெரிய ஏரி 200 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இந்த ஏரி பாசனம் மூலம், ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், விவசாய சாகுபடி நடந்து வருகிறது. இந்நிலையில், ஏரி பாசன வாய்க்கால்கள் பலஆண்டுகளாக, வழியில் 2 கிலோ மீட்டர் துாரத்திற்கு ஆக்கிரமிக்கப்பட்டு, துார்ந்துள்ளது. இதனால் கடை மடை விவசாய நிலங்களுக்கு பாசனம் செய்ய முடியாத நிலை தொடர்ந்துள்ளது.இந்த பாசன வாய்க்காலை ஆக்கிரமித்து, சிலர் குடிசை போட்டும், பயிர் சாகுபடியும் செய்து வருகின்றனர். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், ஏரியில் முழுவதும் தண்ணீர் நிரம்பியிருந்தும் கடைமடை பகுதி விவசாயிகளுக்கு, பாசன நீர் செல்லாமல் பாதிக்கிறது. இது குறித்து, கலெக்டர் நடவடிக்கை எடுத்து, ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்ற வேண்டும்என்றனர்.