விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த 78வது சுதந்திர தின விழாவில் கலெக்டர் தேசிய கொடியேற்றி, 224 பயனாளிகளுக்கு 1.09 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.விழுப்புரம் மாவட்ட பெருந்திட்ட வளாக மைதானத்தில் நேற்று, 78வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கலெக்டர் பழனி தலைமை தாங்கி, தேசியகொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து வெண் புறாக்கள் மற்றும் மூவர்ண பலுான்கள் பறக்க விடப்பட்டு, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார்.மேலும், சுதந்திர போராட்ட தியாகிகள், அவர்களின் வாரிசுதாரர்களுக்கு சால்வை அணிவித்து, நினைவு பரிசுகளை வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.இதையடுத்து, முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் மூவருக்கு 60 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளும், முதல்வர் பொதுநிவாரண நிதி திட்டத்தின் கீழ், மூவருக்கு 3 லட்சம் மதிப்பீட்டில் அரசின் நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.சமூக பாதுகாப்பு திட்டம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, மாவட்ட பிற்படுத்தபட்டோர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, தோட்டக்கலை துறை, வேளாண் துறை, தொழிலாளர் நலத்துறை உட்பட மொத்தம் 224 பயனாளிகளுக்கு 1.09 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரசின் நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.இதையடுத்து, விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளி உட்பட அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், மல்லர் கம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.சிறப்பாக பணிபுரிந்த மாவட்ட அளவிலான 295 அலுவலர்கள், பணியாளர்கள், பத்திரிகையாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ், சுதந்திர தின விழா கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.சுதந்திர தின நிகழ்ச்சிகளுக்கு முன்னதாக, விழுப்புரம் நகரில் உள்ள காந்தி சிலைக்கு, கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.விழாவில், டி.ஐ.ஜி., திஷா மித்தல், எம்.எல்.ஏ.,க்கள் லட்சுமணன், சிவக்குமார், மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், துணைச் சேர்மன் ஷீலாதேவி சேரன், மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, கூடுதல் கலெக்டர் ஸ்ருதன்ஜெய் நாராயணன், மாவட்ட வன அலுவலர் சுமேஷ் சோமன், ஆர்.டி.ஓ., காஜா ஷாகுல் அமீது உட்பட அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.