வாசகர்கள் கருத்துகள் ( 1 )
தொடரும் இழுப்பறியால் வாகணஓட்டிகள் கடூம்அவதி குறிப்பிட்டநேரத்தில் செல்லமுடிவில்லை.
விக்கிரவாண்டி: விழுப்புரம்-நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலை பணியில் மயிலாடுதுறை மாவட்டம் காரைமேடு - நாகப்பட்டினம் இடையே ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் பணியை, நகாய் அதிகாரிகள் துரிதப்படுத்தி பணியை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.விழுப்புரம் - நாகப்பட்டினம் இடையே 194 கி.மீ., துாரத்திற்கு நான்கு வழிச்சாலை (என்.எச்.332-ஏ) அமைக்க மத்திய அரசு ரூ.6,500 கோடி நிதி ஒதுக்கியது.பணிகளை விரைந்து முடித்திட 4 கட்டங்களாக பிரித்து நகாய் ஒப்பந்தம் செய்தது.இதில் முதல் 3 கட்டங்களில் 0-123.8 கி.மீ., துாரம் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா, சட்டநாதபுரம் (காரைமேடு) வரை 85 சதவீத பணிகள் நடந்துள்ளது.நான்காவது கட்ட பணியான காரைமேடு - நாகப்பட்டினம் வரை 56 கி.மீ., துாரத்திற்கு புத்துார் ரவுண்டானா வரை ரூ.1,906 கோடி திட்ட மதிப்பில் பணிகளை குஜராத்தைச் சேர்ந்த வெல்ஸ்பன் எண்டர்பிரைசஸ் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. 2021ல் துவங்கிய பணி சாலை அமைக்க நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட சட்ட சிக்கல் மற்றும் மண் கிடைக்காத காரணங்களால் இதுவரை 48 சதவீத பணிகள் மட்டுமே முடிந்துள்ளது.பெரிய அளவிலான பணிகளான திருக்கடையூர், காளியப்பநல்லுாரில் தலா ஒன்று, காரைக்கால் மற்றும் நாகப்பட்டினத்தில் தாலா 2 என மொத்தம் 6 மேம்பாலங்கள் அமைத்து, இணைப்பு சாலை பணி மிக தாமதமாகவே நடைபெற்று வருகிறது.உப்பனாறு, நந்தலாறு, வெட்டாறு உள்ளிட்ட 7 இடங்களில் ஆற்றைக் கடக்கின்ற வகையில் பெரிய பாலப் பணிகளும், சிறிய வாய்க்காலை கடக்கும் வகையில் 29 இடங்களில் சிறிய பாலப் பணிகளும், மழைநீர் வடிகால் வாய்கால், தண்ணீர் கடக்க கல்வெர்ட் என 221 இடங்களில் குறும்பால பணிகள் மந்த நிலையிலேயே நடக்கிறது.ஒழுகை மங்கலம் கிராமத்தில் உப்பனாறு பாலத்தில் ரயில்வே மேம்பாலம் பணிக்காக பவுசிங் கர்டர் தயாராக உள்ளது. திருக்கடையூரில் ஜெயபுரம் பகுதியில் வேப்பச்சேரி ரோட்டில் உள்ள 4 வீடுகள் அகற்றப்படாமல் உள்ளது. வீடு கட்டி வசிப்பவர்கள் தங்களுக்கு வழங்கிய இழப்பீட்டு தொகை போதுமானதாக இல்லை எனவும் , தாழ்வான மழை வடிகால் பகுதியில் அடிப்படை வசதிகள் இல்லாத பகுதிக்கு இடம் பெயர அதிகாரிகள் கூறியதால் மறுத்து வீட்டை காலி செய்யாமல் உள்ளனர். இதனால், இப்பகுதியில் சாலை அமைத்து இணைக்கும் பணி கிடப்பில் உள்ளது.காரைக்காலில் பச்சூர் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க 2022ல் பில்லர்கள் அமைத்து அதன் பிறகு கர்டர்கள் தயாராகாததால் மேம்பாலம் பணி நடைபெறாமல் உள்ளது.திருநள்ளாறு பைபாஸ் பணி 6 கி.மீ., துாரத்திற்கும் , காரைக்கால் பைபாஸ் 14 கி.மீ., துாரத்திற்கும், நாகப்பட்டினம் பைபாஸ் 15 கி.மீ., துாரத்திற்கும் பணிகள் மந்தமாகவே நடைபெற்று வருகிறது.இதனால் இப்பகுதிகளில் சாலைகள் கரடுமுரடாக புழுதி பறக்கும் பயணத்தை வாகன ஓட்டிகள் சந்தித்து வருகின்றனர்.நாகப்பட்டினம் அருகே வடகுடி பகுதியில் சிமென்ட் சாலை, சிறு பாலம் அமைக்கும் பணிகள் விரைந்து நடைபெற்று வருகிறது. நான்காவது கட்ட நான்கு வழிச்சாலை பணிகள் பெரும்பாலும் கிராமங்களையொட்டியே சாலை அமைக்கும் பணி நடைபெறுவதால் நிலம் கையகப்படுத்தில் தாமதம் ஏற்படுவதாக பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.சாலை அமைக்க தேவையான மண் பற்றாக்குறை காரணமாக, என்.எல்.சி., சுரங்கத்தில் வழங்கப்படும் சாம்பலை (பாண்டு) வாங்கி கொட்டி சாலை அமைக்கலாம். நெய்வேலியில் இருந்து 100 கி.மீ., சுற்றளவிற்கு இந்த பாண்டுவை இலவசமாக சப்ளை செய்கின்றனர். 2025ம் ஆண்டு ஜனவரியில் பணியை முடிக்க நகாய் கெடு விதித்திருந்தாலும் தற்போது பணி நடைபெறும் சூழல்களைப் பார்க்கும் போது 2026ம் ஆண்டில்தான் பணியை நிறைவு செய்ய முடியும் நிலை உள்ளது.பொதுமக்கள் நலன்கருதி நகாய் அதிகாரிகள் காரைமேட்டிலிருந்து நாகப்பட்டினம் வரை நடைபெற்று வரும் சாலை பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொடரும் இழுப்பறியால் வாகணஓட்டிகள் கடூம்அவதி குறிப்பிட்டநேரத்தில் செல்லமுடிவில்லை.