உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / இந்திய தொல்லியல் துறை கூடுதல் இயக்குனரிடம் கோரிக்கை மனு

இந்திய தொல்லியல் துறை கூடுதல் இயக்குனரிடம் கோரிக்கை மனு

செஞ்சி: இந்திய தொல்லியல் துறை கூடுதல் இயக்குனரிடம் செஞ்சி பேரூராட்சி தலைவர் 10 கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுத்தார். இந்திய தொல்லியல் துறையின் கூடுதல் இயக்குனர் ஜான்விச் ஷர்மா செஞ்சி கோட்டையில் நேற்று முன்தினம் ஆய்வு செய்தார். அவரிடம் செஞ்சி பேரூராட்சி தலைவர் மொக்தியார் 10 கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுத்தார். அமைச்சர் மஸ்தான், கலெக்டர் பழனி, ஒன்றிய சேர்மன் விஜயகுமார் ஆகியோர் உடன் இருந்தனர். மனு விபரம்:செஞ்சி கோட்டையில் சுற்றலாவை மேம்படுத்தவும், புதியவர்களின் ஈர்ப்பை பெறவும், இங்குள்ள செட்டிக்குளத்தில் படகு சவாரி அமைக்க வேண்டும். மைசூரில் உள்ள அரண்மனைகளின் முன் செய்துள்ளதை போல் செஞ்சி கோட்டையில் அழகிய பூங்காக்களை அமைத்து, பசுமையான கோட்டையாக மாற்ற வேண்டும்.கோட்டை சாலையில் வடிகால் வசதியுடன், நடந்து செல்ல சிமென்ட் சாலை அமைக்க வேண்டும். சாலையோரங்களில் மக்களை ஈர்க்கும் வகையில் அலங்கார மின் விளக்குகளை அமைக்க வேண்டும். போதிய அளவிற்கு குடிநீர் வசதிகளை செய்ய வேண்டும். 800 அடி உயரம் உள்ள செஞ்சி கோட்டையை முதியவர்கள், மாற்று திறனாளிகள் பார்வையிட வசதியாக ரோப் கார் வசதி செய்ய வேண்டும். ராஜகிரி கோட்டை தரைத்தளத்தில் உள்ள கல்யாண மஹால் சுற்றுலா பயணிகளை அதிகம் கவரும் பகுதியாக உள்ளது. இங்கு அருங்காட்சியகமும், செஞ்சி கோட்டையின் வரலாற்றை விளக்கும் ஒளி, ஒலி காட்சியை அமைக்க வேண்டும். கோட்டையைச் சுற்றியுள்ள அகழிகளை துார்வாரி நீர்நிலைகளை மேம்படுத்தி, அகழியின் மேற்பரப்பில் பூங்காக்களை அமைக்க வேண்டும். இரவு நேரத்திலும் செஞ்சி கோட்டையில் உள்ள கலை நயம் மிக்க கட்டடங்களை துாரத்தில் இருந்து மக்கள் ரசிக்கும் வகையில் கோட்டையில் அதிக சக்தி வாய்ந்த மின் விளக்குகளை அமைக்க வேண்டும்.தற்போது பயன்பாட்டில் இல்லாத வேலுார் வாயில் பகுதியை புதுப்பித்து பிரதான நுழைவு வாயிலாக மேம்படுத்தவும், இதன் முன்பு காலியாக உள்ள தரைப்பகுதியில் பூங்காக்களை அமைக்க வேண்டும்.வயதானவர்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் செஞ்சி கோட்டையை காண்பதற்கு வசதியாக பேட்டரி கார்களை அறிமுகம் செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !