| ADDED : மே 28, 2024 05:41 AM
விழுப்புரம் மாவட்டத்தில் அமைச்சர் பொன்முடி தலைமையில் ஒரு கோஷ்டியும், அமைச்சர் மஸ்தான் தலைமையில் ஒரு கோஷ்டியும் செயல்பட்டு வருகின்றது. விழுப்புரம் ஒருங்கிணைந்த மாவட்டத்தின் செயலாளராக பொன்முடி இருந்த போது, ஒரே கோஷ்டியாக செயல்பட்டு வந்தது. மாவட்டம் பிரிக்கப்பட்ட பிறகு, விழுப்புரம் வடக்கு மாவட்டத்தில் இருந்த பொன்முடி ஆதரவாளர்கள் பலரை மஸ்தான் தன் பக்கம் இழுத்துக்கொண்டார். இப்படி இருந்தும், வடக்கு மாவட்டத்தில் பொன்முடி ஆதரவாளர்கள் பலர் மஸ்தான் பக்கம் போகாமல் தனி கோஷ்டியாக செயல்பட்டு வருகின்றனர். இதில் பொன்முடியின் ஆதரவாளரான திண்டிவனம் 17 வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் ரேணுகா இளங்கோவன் சார்பில் பொன்முடியின் படத்தை பெரிய அளவில் போட்டு வைத்திருந்த, பேனர், திண்டிவனத்தில் நேற்று முன்தினம் மர்ம நபர்களால் கிழித்து சேதப் படுத்தப்பட்டது. இது தொடர்பாக இளங்கோவன் சார்பில் திண்டிவனம் டவுன் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. பேனர் கிழிக்கப்பட்ட இடத்தில் சி.சி.டி.வி.,இருந்தும், பேனர் கிழத்தவர்களை போலீசார் இதுவரை ஏன் கைது செய்யவில்லை பொன்முடி ஆதரவாளர்கள் போலீசாரிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.இதன் தொடர்ச்சியாக தி.மு.க.,பிரமுகர் இளங்கோவன் சார்பில் திண்டிவனம் மேம்பாலம்(காமராஜர் சிலை) அருகிலிருந்து தாலுகா அலுவலகம் வரை இரண்டு பக்கமும் மீண்டும் பொன்முடி படத்தை பெரியதாக போட்டு, கருணாநிதி பிறந்த நாளுக்காக அதிரடியாக 6க்கு மேற்பட்ட பேனர்களை வைத்த சம்பவம் திண்டிவனத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.