பள்ளிகளில் அழுகிய முட்டைகள்; பி.டி.ஓ., ஆய்வில் கண்டுபிடிப்பு
மயிலம்; தழுதாளி கிராமத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்க இருந்த அழுகிய முட்டைகள், பி.டி.ஓ., ஆய்வுக்குப் பின் பள்ளம் தோண்டி புதைக்கப்பட்டது.விழுப்புரம் மாவட்டம், மயிலம் அடுத்த தழுதாளி கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் அரசு ஆரம்பப் பள்ளி உள்ளது. இந்த பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்க அழுகிப்போன முட்டைகளை சமைப்பதாக கிராம மக்கள் நேற்று வட்டார வளர்ச்சி அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர்.அதன்பேரில், வட்டார வளர்ச்சி அலுவலர் சிலம்புச்செல்வன் இரு பள்ளிகளுக்கும் நேரில் சென்று, சமையலறையில் வேக வைத்துக் கொண்டிருந்த மூட்டைகளை ஆய்வு செய்தார். அதில் பெரும்பாலான முட்டைகள் அழுகியிருப்பது தெரியவந்தது.அதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு வழங்க இருந்த 490 முட்டைகளையும் பள்ளம் தோண்டி புதைக்க உத்தரவிட்டார். அதன்படி ஜே.சி.பி., மூலம் பள்ளம் தோண்டி முட்டைகள் புதைக்கப்பட்டது.மேலும், இன்று மாணவர்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த 490 முட்டைகள் பி.டி.ஓ., அலுவலகத்திற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது.