| ADDED : ஆக 14, 2024 05:50 AM
விழுப்புரம் : சுதந்திர தின விழாவையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் 1,200க்கும் மேற்பட்ட போலீசார் பலத்த பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாவட்ட எல்லைகளில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட போலீசாருக்கு, எஸ்.பி., தீபக் சிவாச் உத்தரவிட்டுள்ளார்.சுதந்திர தின விழாவையொட்டி, தமிழகத்தில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க தமிழகத்தில் காவல் துறையினர் தீவிர பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் எஸ்.பி., தீபக் சிவாச் தலைமையில் நடந்தது.அதில், போலீசார் மாவட்ட எல்லைகளில் வாகன தணிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். வெளிமாநில, மாவட்ட வாகனங்களை தீவிரமாக சோதனை செய்த பின்னரே, மாவட்டத்திற்குள் மற்றும் வெளியே செல்ல அனுமதிக்க வேண்டும்.கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகளிலும், தேச தலைவர்களின் சிலைகளுக்கும் பாதுகாப்பு பணிகளை பலப்படுத்த வேண்டும்.மேலும், இதையொட்டி, மாவட்டத்தில் உள்ள பஸ் மற்றும் ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ள இடங்களில் அவர்களின் உடைமைகளை மெட்டல் டிடெக்டர் மற்றும் மோப்ப நாய்கள் மூலம் சோதனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.அதன்படி மாவட்டத்தில் பல இடங்களில் போலீசார் மெட்டல் டிடெக்டர் மற்றும் மோப்ப நாய்கள் மூலம் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.அதுமட்டுமின்றி, சுதந்திர தின விழாவில், அணிவகுப்பு நடத்துவதற்காக விழுப்புரம் ஆயுதப்படை மைதானத்தில் போலீசார் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர்.தொடர்ந்து, மாவட்டத்தில் உள்ள செக் போஸ்ட்களிலும், தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். சுதந்திர தின விழாவையொட்டி மாவட்டம் முழுதும் 1,200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.