| ADDED : ஏப் 25, 2024 11:00 PM
திண்டிவனம்: திண்டிவனம் அருகே உள்ள ரைஸ் மில்லில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி மூட்டைகளை குடிமை பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டிவனம் அருகே சென்னை தேசிய நெடுஞ்சாலையிலுள்ள சலவாதியில், அரிசி ஆலை உள்ளது. இந்த ஆலையில், ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருப்பதாக, விழுப்புரம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில், சப்இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான குழுவினர், சம்பந்தப்பட்ட அரிசி ஆலையில் நேற்று காலை 11 மணியளவில் திடீர் ரெய்டு நடத்தினர்.இதில் மூட்டையாக கட்டி வைக்கப்பட்டிருந்த 1,800 கிலோ எடையுள்ள ரேஷன் அரிசி மற்றும் சுமார் 2 டன் எடையுள்ள கலப்பு ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். இதில் ரேஷன் அரிசியுடன், கருப்பு நிறத்திலுள்ள மற்றொரு அரிசியை சேர்த்து அறைத்து கோழித்தீவனம் தயாரிப்பதற்காக வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் விசாரணை நடத்தியதில், திண்டிவனம் டி.வி.நகரை சேர்ந்த கண்ணன் மகன் சேகர், 50; என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.