நிருபர்களுக்கு அனுமதி மறுப்பு பூட்டிய அறையில் ஒன்றியக்குழு கூட்டம்
வானூர் ஒன்றியக்குழு கூட்டத்தில் இருந்து நிருபர்கள் வெளியேற்றப்பட்டு, பூட்டிய அறையில் நடந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வானூர் ஒன்றியத்தில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., வி.சி.,ஆகிய கட்சிகளை சேர்ந்த மொத்தம் 27 வார்டு கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் ஒன்றிய சேர்மனாக தி.மு.க., வை சேர்ந்த உஷா முரளியும், துணை சேர்மனாக பருவகீர்த்தனா விநாயகமூர்த்தி ஆகியோரும் இருந்து வருகின்றனர்.மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஒன்றியக்குழு கூட்டம் நடத்தப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவது வழக்கம். கடந்த லோக்சபா தேர்தல் மற்றும் விக்கிரவாண்டி சட்டசபை தேர்தல் காரணமாக கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக வானூர் ஒன்றியக்குழு கூட்டம் நடத்தப்படவில்லை.இந்நிலையில் சமீபத்தில், ஒன்றியக்குழு கூட்டம் வானூர் பி.டி.ஓ., கூட்ட அரங்கில் ஒன்றிய சேர்மன் உஷா முரளி தலைமையில் நடந்தது. கூட்டத்தின் துவக்கத்தில் இருந்து அ.தி.மு.க., கவுன்சிலர்களும், கூட்டணி கட்சியில் உள்ள வி.சி., பெண் கவுன்சிலரும் மக்கள் பிரச்னைகள் குறித்து சராமரியாக கேள்விகளை எழுப்பினர்.எப்போதுமே வாய்பேசாத பொம்மையாக இருந்த தி.மு.க., கவுன்சிலர்களும், ஒன்றிய சேர்மனுக்கு எதிராக எழுந்து மக்கள் பிரச்னை குறித்து காரசாரமாக பேச துவங்கினர். அப்போது, கூட்ட அரங்கிற்குள் செய்தி சேகரிக்க சென்ற அனைத்து நிருபர்களையும் ஒன்றிய சேர்மன் உஷா முரளி, வெளியேற்றி விட்டார். பின் பூட்டிய அறையில் ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது. கூட்டம் முடிந்து வெளியே வந்த ஒன்றிய கவுன்சிலர்களிடம் கேட்ட போது, ஒன்றிய கவுன்சிலர்களுக்கு, வளர்ச்சி பணி மேற்கொள்ள கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்வது கிடையாது. அப்படி நிதி வந்தாலும், எங்கள் அனுமதியின்றி ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு ஒதுக்கீடு செய்து விடுகின்றனர். இதனால் நாங்கள் மக்களிடம் பதில் சொல்ல முடியவில்லை. இதனால் சக தி.மு.க., கவுன்சிலர்களும், திடீரென ஆவேசமாக பேசினர். இது வெளியில் தெரியாமல் இருக்க, நிருபர்களை ் வெளியேற்றப்பட்டதாக கூறினர். ஒவ்வொரு கூட்டத்திலும், தி.மு.க., கவுன்சிலர்கள் தலையாட்டி பொம்மையாக இருந்து விட்டு தீர்மான நோட்டீல் கையெழுத்து மட்டுமே போட்டு விட்டு செல்வது வழக்கம். தற்போது நடந்த கூட்டத்தில், தி.மு.க., கவுன்சிலர்களே, சேர்மனுக்கு எதிராக போர்கொடி தூக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.