டிராக்டர் மீது வேன் மோதி 10 பேர் படுகாயம்
வானுார்: புதுச்சேரி அருகே டிராக்டர் பின்புறம் மினிவேன் மோதிய விபத்தில் இரு டிரைவர்கள் உட்பட 10 பேர் படுகாயமடைந்தனர். திண்டிவனத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி நேற்று அதிகாலை டூரிஸ்ட் மினி வேன் 10க்கும் மேற்பட்டோருடன் சென்று கொண்டிருந்தது. வேனை புதுச்சேரி கொம்பாக்கத்தைச் சேர்ந்த வினோத்குமார், 35; ஓட்டினார். வேன் புதுச்சேரி-திண்டிவனம் சாலையில், நாவற்குளம் சாலை சந்திப்பில் சென்றபோது, முன்னால் சென்ற டிராக்டரின் பின்புறம் மோதி தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேன் மற்றும் டிராக்டர் முன்பக்கம் நொறுங்கியது. வேனில் இருந்த புதுச்சேரி சாரம் பகுதியைச் சேர்ந்த பரசு, 30; இவரது மனைவி மஞ்சு, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த டான்மோ, 37; ஹரிபிட்டா, 26; மினி வேன் ஓட்டுநர் வினோத்குமார், டிராக்டர் டிரைவர் மொரட்டாண்டி ராஜேஷ், 33; உட்பட 10 பேர் படுகாயமடைந்தனர். ஆரோவில் போலீசார் மற்றும் நெடுஞ்சாலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, விபத்தில் சிக்கியவர்களை மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.