மாவட்டத்தில் 12 புயல் பாதுகாப்பு மையங்கள் தயார்: 350 இடங்களில் தற்காலிக முகாமிற்கு இடம் தேர்வு
விழுப்புரம்:விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை பாதிப்பு ஏற்பட்டால் மீட்பு பணிகளை மேற்கொள்ள பிர்க்கா வாரியாக குழுக்களுடன் தயார் நிலையில் உள்ளதாக கலெக்டர் பழனி தெரிவித்தார்.விழுப்புரம் மாவட்டத்தில், இருதினங்களாக மழை பெய்து வரும் நிலையில், நேற்று காலை விழுப்புரம் புதிய பஸ் நிலையம், காந்தி நகர் பகுதிகளில், மழை முன்னெச்சரிக்கை பணிகளை கலெக்டர் பழனி பார்வையிட்டார். தொடர்ந்து, கட்டபொம்மன் நகர் பகுதியில் மழைநீர் வெளியேற்றப்படும் வாய்க்காலினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: விழுப்புரம் மாவட்டத்தில், நேற்றிலிருந்து தொடர்ந்து மிதமான மழை பெய்து வருகிறது. மரக்காணம் பகுதியில் 11 செ.மீ. மழையளவும், விழுப்புரம் பகுதிகளில் 6.6 செ.மீ மழையளவும் பதிவாகியுள்ளது. குறிப்பாக, மரக்காணம் பகுதியில் நேற்று காலை முதல் தொடர் மழை பெய்து வந்த போதிலும், மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையினால், மழைநீர் உடனடியாக வடிந்து, பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்டாத வகையில், அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் மழைநீர் தேங்கும் நிலை இருந்து வந்தது. இப்பகுதியிலும் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையினால் மழைநீர் தேங்காமல் உடனுக்குடன் பம்ப் அவுஸ் மூலம் வெளியேற்றப்படுகிறது. கனமழை பெய்தாலும், உடனுக்குடன் மழைநீர் வெளியேற்றப்படும்.இந்த மழை தொடர்பாக, முதல்வரும் கேட்டறிந்து, மாவட்டங்களில் கனமழையினால் பாதிப்புகள் ஏற்படாத வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அறிவுரைகள், ஆலோசனைகள் வழங்கியுள்ளார். தொடர்ந்து, கனமழை எதிர்கொள்ளும் விதத்தில், விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து குறுவட்ட அளவிலும் அலுவலர்கள் குழு நியமிக்கப்பட்டு, மழைப்பாதிப்பு ஏற்படாத வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.நமது மாவட்டத்தின் கடற்கரையோர கிராமப் பகுதிகளில் 12 புயல் பாதுகாப்பு முகாம்கள் தயார் நிலையில் உள்ளது. மேலும், ஒவ்வொரு கிராமங்களிலும் தற்காலிகமாக முகாம்கள் அமைத்திட 850 முகாம்கள் அமைப்பதற்கான இடமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. கனமழை பாதிப்பு ஏற்படும் பட்சத்தில், இம்முகாம்களில் பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டு, சுகாதாரமான உணவு, குடிநீர் உள்ளிட்டவைகள் வழங்கப்படவுள்ளது. மேலும், சுகாதாரத்துறை மூலம் 38 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இக்குழுக்கள் மழைபாதிப்பு ஏற்படும் பகுதிகளுக்கு நேரில் சென்று மருத்துவ முகாம் நடத்தி நோய்த்தொற்று பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்வார்கள் என்று தெரிவித்தார்.ஆய்வின்போது, விழுப்புரம் நகராட்சி ஆணையர் வீரமுத்துக்குமார் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.