போலி நகை அடகு வைத்த 2 பேர் கைது
செஞ்சி : செஞ்சியில் போலி நகையை அடகு வைத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.செஞ்சி, காந்தி பஜாரைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் மகன் ராஜேஷ், 38; நகைக்கடை மற்றும் அடகு கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு கடந்த மாதம் 4ம் தேதி விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தைச் சேர்ந்த ராஜா, 48; என்பவர் 4 கிராம் நகையை அடகு வைத்து 18 ஆயிரத்து 500 ரூபாய் வாங்கி சென்றார். அவர் சென்ற பிறகு சோதித்து பார்த்தில், அடகு வைத்த நகை போலி என தெரியவந்தது.நேற்று முன்தினம் ராஜா மீண்டும் ராஜேஷிடம் அடகு வைக்க 10 மோதிரங்களைக் கொண்டு வந்தார். ஏற்கனவே வைத்த நகை போலி என ராஜேஷ் கூறியதும், ராஜா தப்பியோட முயன்றார். பொதுமக்கள் உதவியுடன் ராஜாவை பிடித்து செஞ்சி போலீசில் ஒப்படைந்தார்.விசாரணையில், விழுப்புரத்தைச் சேர்ந்த நகை தொழிலாளி பாபு, 41; என்பவர் போலி நகைகளை ராஜாவிடம் கொடுத்து அடகு வைக்கச் சொன்னது தெரியவந்தது. இதையடுத்து செஞ்சி போலீசார் வழக்கு பதிந்து ராஜா, பாபு இருவரையும் கைது செய்தனர்.