4 தரைப்பாலங்கள் மூழ்கி 30 கிராமங்களில் போக்குவரத்து... பாதிப்பு : கன மழையால் பல ஆண்டுகளாக தொடரும் அவலம்
விழுப்புரம்: மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையால், 4 தரைப்பாலங்கள் தண்ணீரில் மூழ்கி, 30க்கும் மேற்பட்ட கிராமங்களில், போக்குவரத்து தடைபட்டுள்ளதால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் கிராமங்கள் நிறைந்த பகுதி. இந்த கிராமங்களுக்கான அடிப்படை வசதிகள் அனைத்தும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் செய்யப்படுகிறது. இந்த கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், மழைக்காலங்களில் அதிக பாதிப்பிற்குள்ளாவது தொடர் கதையாகி வருகிறது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை கடந்த சில தினங்களாக மாவட்டத்தில் வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் பல கிராமங்களில் ஏரிகள் நிரம்பியும், சில கிராமங்களில் விளை நிலங்களில் பயிர்கள் நீரில் மூழ்கியும் உள்ளன. இது ஒருபுறம் இருக்க, திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனுார் அணை நீர் நிரம்பியதால், உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் தென்பெண்ணை மற்றும் மலட்டாற்றில் தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில், திருவெண்ணெய்நல்லுார் - பொய்கை அரசூர் கிராமங்களுக்கு இடையேயும், விக்கிர வாண்டி - சின்னதச்சூர், மேட்டுப்பாளையம் - பரசுரெட்டிபாளையம் மற்றும் காணை கிராமம் உள்ளிட்ட பகுதிகளில் தரைபாலங்கள் தற்போது பெய்த கனமழையால் மூழ்கியுள்ளன. இதனால் கொங்கம்பட்டு, சேர்ந்தனுார், அரசூர், பில்லுார், குச்சிபாளையம், அரசமங்கலம் உட்பட, 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அப்பகுதி மக்கள், அத்தியாவசிய தேவை உள்ளிட்டவைகளுக்காக , பல கிலோ மீட்டர் சுற்றி கொண்டு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது குறித்து ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் கூறியதாவது: மாவட்டத்தில் மழை நீரால் மூழ்கிய, 4 தரை பாலங்கள் உட்பட மேலும் புதிதாக, 6 தரை பாலங்கள் சேர்த்து மொத்தம் 10 தரை பாலங்கள் கட்ட தலா, ரூ.9 கோடி என நபார்டு வங்கி மூலம் கட்டுவதற்காக திட்ட மதிப்பீடு தயார் செய்து, கோப்புகளை தலைமை அதிகாரிக்கு அனுப்பி உள்ளோம். இதற்கான நிதி கிடைத்தவுடன் விரைவாக பாலம் கட்டும் பணிகளை துவங்கி விடுவோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.