விழுப்புரத்தில் ரயில்வே இடத்தில் இருந்த 44 ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து
விழுப்புரம்: விழுப்புரத்தில் தெற்கு ரயில்வே இடத்தை ஆக்கிரமித்து கட்டியிருந்த 44 வீடுகள் பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டன. விழுப்புரம் பவர்ஹவுஸ் சாலையில், 44 குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் கடந்த, 70 ஆண்டுகளுக்குமேல், வீடு கட்டி வசித்து வந்தனர். அவர்கள் தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து அனுமதியின்றி குடியிருப்புகள் கட்டியுள்ளதாகவும், அதனை அகற்றுமாறு, சென்னை ஐகோர்ட்டில், திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் சார்பில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கை விசாரித்த ஐகோர்ட் நீதிபதிகள், ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்ற கடந்த ஆண்டு ஜன., 5ம் தேதி உத்தரவிட்டனர். இதையடுத்து, குடியிருப்பு மக்களிடம் தாங்களாகவே முன்வந்து வீடுகளை காலி செய்யுமாறு தெற்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் கொடுத்தனர். அதற்கு, அரசு சார்பில் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கக்கோரி அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்தனர். இதைத்தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் 44 குடும்பத்திற்கும், திருப்பாச்சனுாரில் தலா, 3 சென்ட் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டது. மேலும், 3 மாதத்திற்குள் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் வீடு கட்டித்தர நடவடிக்கை எடுப்பதாகவும் அதிகாரிகள் கூறினர். ஆனால், அப்பகுதி மக்களுக்கு வழங்கிய வீட்டுமனையில் வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், 44 குடும்பத்தினரும் பவர்ஹவுஸ் சாலையிலேயே வசித்து வந்தனர். இந்நிலையில் நேற்று, 8 ம் தேதிக்குள் ஆக்கிரமிப்புகளை தாங்களே அகற்றிக்கொள்ள வேண்டும் எனவும், தவறினால் ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என ரயில்வே நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சிலர் தாங்களாகவே வீடுகளை காலி செய்தனர். மீதமுள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றும் பணி நேற்று நடந்தது. காலை 7:00 மணியளவில் விழுப்புரம் ஆர்.டி.ஓ., முருகேசன், தாசில்தார் கனிமொழி, நகராட்சி கமிஷனர் வசந்தி உள்ளிட்ட வருவாய் துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள், ரயில்வே அதிகாரிகள் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மொத்தம், 6 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்பு வீடுகளை இடித்து அகற்றும் பணி நடந்தது. குடியிருப்புகளில் இருந்த பொருட்களை ஊழியர்களே எடுத்து வெளியே வைத்துவிட்டு வீடுகளை இடித்து அகற்றினர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொக்லைன் இயந்திரங்களை தடுக்க முயன்ற பொதுமக்களை போலீசார் தடுத்தனர். இதனால், பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும், தங்களுக்கு வீடு கட்டிக்கொடுத்துவிட்டு, அங்கு சென்ற பின், வீடுகளை இடிக்குமாறு அதிகாரிகளிடம், பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால், கோர்ட் உத்தரவுப்படி ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக அதிகாரிகள் கூறினர். இதையடுத்து, சிலர் தங்களின் வீடு இடிக்கப்படுவதை கண்டு தரையில் புரண்டு கண்ணீர் விட்டு அழுதனர். தொடர்ந்து, மதியம் 1:30 மணியளவில் 44 வீடுகளும் இடித்து அகற்றும் பணி நிறைவடைந்தது. ஏ.டி.எஸ்.பி., தினகரன், ஏ.எஸ்.பி., ரவீந்திரகுமார் குப்தா தலைமையில் போலீசார் மற்றும் ரயில்வே போலீசார், ரயில்வே பாதுகாப்பு படை போலீசார், 300 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், முன்னெச்சரிக்கையாக நடவடிக்கையாக வஜ்ரா வாகனம், தீயணைப்பு வாகனம் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டது. இச்சம்பவம் விழுப்புரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.