ஊசி போட்ட 6 குழந்தைகளுக்கு பாதிப்பு திண்டிவனம் மருத்துவமனையில் பரபரப்பு
திண்டிவனம் : திண்டிவனம் அரசு மருத்துவமனையில் ஊசி போட்ட 6 குழந்தைகளின் உடல் நிலை பாதிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அரசு தலைமை மருத்துவமனையில், குழந்தைகளுக்கென தனி வார்டு உள்ளது. இங்கு, நேற்று இரவு 9;௦௦ மணியளவில் காய்ச்சல் அதிகமாக உள்ள இரண்டு வயதிலிருந்து நான்கு வயதுடைய குழந்தைகளுக்கு ஊசி போட்டுள்ளனர். அதில், 6 குழந்தைகளுக்கு வலிப்பு மற்றும் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் பெற்றோர் கதறி அழுதனர். மருத்துவமனையில் தவறான ஊசி போட்டதால்தான் குழந்தைகள் பாதிக்கப்பட்டதாக கூறி, மருத்துவமனை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து திண்டிவனம் அரசு மருத்துவமனை சி.எம்.ஓ., முரளிஸ்ரீ தலைமையில் கூடுதல் டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அதையடுத்து, மேல் சிகிச்சைக்காக 6 குழந்தைகளை, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. சிகிச்சை முறை குறித்து சி.எம்.ஓ., முரளிஸ்ரீ கூறுகையில், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கடந்த 3 நாட்களாக உள்நோயாளியாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. வழக்கமாக போடும் ஊசிதான் குழந்தைகளுக்கு போடப்பட்டது. சில குழந்தைகளுக்கு மட்டும் பிட்ஸ் வந்துவிட்டது. பாதிக்கப்பட்ட 6 குழந்தைகளுக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லுாரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு பிறகு அனைத்து குழந்தைகளும் நல்ல நிலையில் உள்ளனர் என தெரிவித்தார். இச்சம்பவத்தால் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.