விழுப்புரம்; விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் ஒரு மாதத்தில் 89 ஆயிரத்து 448 மனுக்கள் பெறப்பட்டது. இதில், 2,436 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில்87 ஆயிரத்து 012 மனுக்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு திட்டங்கள் பொதுமக்களின் இருப்பிடங்களுக்கு அருகிலேயே சென்று வழங்க உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம் துவங்கப்பட்டுள்ளது. இம்முகாமை, ஜூலை 15ம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். தமிழகம் முழுவதும் வரும் நவம்பர் மாதம் வரை 10 ஆயிம் முகாம் நடத்தப்படுகிறது. தமிழகத்தில் உள்ள கடைகோடி மக்கள் அன்றாடம் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள், திட்டங்களை, அவர்கள் வசிக்கும் பகுதிகளில் சென்று வழங்க துவங்கப்பட்டுள்ளது. நகர்ப்புற பகுதிகளில் நடக்கும் முகாம்களில் 13 துறைகளின் 43 சேவைகள் மற்றும் ஊரகப் பகுதிகளில் நடக்கும் முகாம்களில் 15 துறைகளின் 46 சேவைகள் வழங்கப்படுகிறது. ஜாதிச் சான்று, பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை, மகளிர் உரிமைத் தொகை, மருத்துவ காப்பீட்டு அட்டை, ஆதார் அட்டை திருத்தம், ரேஷன் கார்டு முகவரி திருத்தம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கு பொதுமக்கள் மனு கொடுத்து பயன்பெற அறிவுறுத்தப்பட்டது. குறிப்பாக, அரசு அதிகாரிகள் மற்றும் ஆளுங்கட்சியினர், இம்முகாமில் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பித்து பயன்பெற வலியுறுத்தி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் இத்திட்டத்தில், ஊரகப் பகுதிகளில் 236 முகாம்கள், நகரப் பகுதிகளில் 55 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில், முதல்கட்டமாக ஜூலை 15ம் தேதி துவங்கி கடந்த 14ம் தேதி வரை 102 முகாம்கள் மாவட்டம் முழுதும் நடத்தப்பட்டது. அதில், ஆதார் அட்டை, ரேஷன் கார்டு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 58,223 மனுக்கள் மற்றும் மகளிர் உரிமை தொகை கேட்டு 31,225 மனுக்கள் என 15 துறைகளின் 46 சேவைகளுக்கு 89,448 மனுக்கள் பெறப்பட்டது. இதில், 2,436 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு மீதமுள்ள 87 ஆயிரத்து 012 மனுக்கள் பரிந்துரைக்கு ஏற்கப்பட்டு, அந்தந்த துறைகளின் அதிகாரிகள் விசாரணையில் உள்ளது. முகாமில் கொடுத்த மனுக்கள் மீது 45 நாட்களில் தீர்வு காண வேண்டும் என்பதால், மனு கொடுத்த பொதுமக்கள் தங்கள் மனுக்கள் மீது தீர்வு கிடைக்கும் என காத்திருக்கின்றனர்.