செஞ்சி கோட்டையில் இன்று யுனெஸ்கோ பிரதிநிதி ஆய்வு
செஞ்சி: செஞ்சி கோட்டையை உலக பாரம்பரிய சின்னமாக தேர்வு செய்வது குறித்து, 'யுனெஸ்கோ' தேர்வுக்குழு பிரதிநிதி இன்று நேரில் ஆய்வு செய்கிறார்.உலக அளவில் புராதனமான இடங்களை 'யுனெஸ்கோ' குழு ஆய்வு செய்து, உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்து வருகிறது. அதன்படி, தமிழகத்தில் கும்பகோணம் ஐராவதீஸ்வரர் கோவில், தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில், ஜெயங்கொண்டம் கங்கை கொண்ட சோழபுரம் கோவில், மாமல்லபுரம் சிற்பங்கள், மேற்குத் தொடர்ச்சி மலை, நீலகிரி மலை ரயில் உள்ளிட்டவற்றை பாரம்பரிய சின்னங்களாக அறிவித்துள்ளது.தற்போது, சத்திரபதி சிவாஜி ஆட்சி செய்த 12 கோட்டைகள் மராட்டிய மன்னர்களின் ராணுவ கேந்திரங்களாக இருந்தவை என்பதால் இவற்றை கலாசார ரீதியிலான உலக பராம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என யுனெஸ்கோவிற்கு மத்திய அரசு பரிந்துரைத்தது.அந்த பட்டியலில் 11 கோட்டைகள் மகாராஷ்டிராவிலும், தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி கோட்டையும் இடம் பெற்றுள்ளன. மராட்டியர்கள் கி.பி., 1678 முதல் 1697 வரை செஞ்சி கோட்டையை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்ததால், புராதன பட்டியலில் இடம் பெற்றுள்ளது.மத்திய அரசு பரிந்துரைத்துள்ள 12 கோட்டைகளையும் யுனெஸ்கோவின் தேர்வுக்குழு பிரதிநிதி பார்வையிட்டு வருகிறார்.அதன்படி, இன்று 27ம் தேதி தென் கொரியாவில் இருந்து வரும் யுனெஸ்கோ பிரதிநிதி, செஞ்சிக் கோட்டையை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளார். மத்திய அரசின் உயரதிகாரிகள், இந்திய தொல்லியல் துறை உயரதிகாரிகள் என, 7 பேர் உடன் வருகின்றனர்.காலை 9:00 மணிக்கு செஞ்சி கோட்டைக்கு வரும் குழுவினர் பகல் 1:00 மணி வரை ஆய்வு செய்கின்றனர். பிற்பகல் 2:00 மணிக்கு காவல் துறை உயரதிகாரிகள், கலெக்டர், சப் கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுடனும், 3:00 மணிக்கு தேர்வு செய்யப்பட்ட பொது மக்கள், மக்கள் பிரதிநிதிகள் என 30 பேர் கொண்ட குழுவை சந்தித்து பேச உள்ளனர்.இந்த குழுவினரின் பரிந்துரை அடிப்படையில், செஞ்சி கோட்டை உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.