வைரபுரத்திலுள்ள ஈஸ்வரன் கோவில் சாலை சீரமைக்க நடவடிக்கை தேவை
திண்டிவனம்; திண்டிவனம் அருகே வைரபுரத்திலுள்ள சிவன் கோவில் இருக்கும் சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒலக்கூர் வட்டாரத்தை சேர்ந்த வைரபுரம் கிராமத்திலுள்ள ஈஸ்வரன் கோவில் மாட வீதி சாலை பல மாதங்களாக பழுதடைந்து குண்டும் குழியமாக அங்குள்ள கிராம மக்களை அச்சுறுத்தி வருகின்றது. இது பிரதான போக்குவரத்து சாலையாக இருப்பதால் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக மாறிவிடுகின்றது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது. பழுதடைந்த சாலையை சீர் செய்யக்கோரி கிராம சபை கூட்டத்தில் பொது மக்கள் சார்பில் பல முறை தீர்மானம் நிறைவேற்றி, வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு அனுப்பியும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். ஈஸ்வரன் கோவில் மாட வீதியிலுள்ள ஈஸ்வரன் கோவில் திருப்பணிக்காக அறநிலையத்துறை சார்பில் ரூ.20 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், ஈஸ்வரன் கோவில் மாட வீதி சாலையை சீரமைக்காக துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.