உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அடாவடி அரசு பஸ் டிரைவர்கள்; அதிகாரிகள் கவனிப்பார்களா?

அடாவடி அரசு பஸ் டிரைவர்கள்; அதிகாரிகள் கவனிப்பார்களா?

திருவண்ணாமலையில் இருந்து சென்னை, புதுச்சேரிக்கு இயக்கப்படும் அரசு பஸ்களில் பாயிண்ட் டூ பாயிண்ட், எல்.எஸ்.எஸ்., அல்ரா டீலக்ஸ், 'ஏசி' பஸ்களைத் தவிர மற்ற சாதாரண பஸ்களை சோமாசிபாடி, கீழ்பென்னாத்துார், கடலாடிகுளம், செம்மேடு, பாலப்பாடி, சத்தியமங்கலம், ஆலம்பூண்டியில் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்ல வேண்டும். ஆனால் ஒரு சில கண்டக்டர்கள் திருவண்ணாமலையில் பயணிகள் ஏறும் போதே வழியில் நிற்காது என பயணிகளை ஏற்றுவதில்லை. பஸ்சில் பயணிகள் கூட்டம் இல்லாமல் இருந்தால் மட்டும் கீழ்பென்னாத்துார், ஆலம்பூண்டி பயணிகளை ஏற்றி வருகின்றனர். மற்ற ஊர் பயணிகளை ஏற்றுவதில்லை. இதே போல் செம்மேடு, சோமாசிபாடியில் நிற்கும் பயணிகளை பெரும்பாலான நேரங்களில் ஏற்றி வருவதில்லை. சத்தியமங்கலத்தில் பஸ் நிறுத்தம் வழியாக செல்லாமல் அனைத்து பஸ்களும் பைபாஸ் வழியாக சென்றதால் கடந்த ஆண்டு பொது மக்கள் சாலை மறியல் அறிவித்தனர். அப்போது நடந்த பேச்சு வார்த்தைக்கு பிறகு பஸ்களை பஸ் நிறுத்தம் வழியாக இயக்கி வருகின்றனர். நெருக்கடி கொடுத்து பஸ்சை ஊருக்குள் திருப்பியதால் சத்தியமங்கலம் கிராம மக்கள் மீது அரசு பஸ் டிரைவர்கள் அதிருப்தியில் உள்ளனர். இதனால், வேண்டுமென்றே இந்த பஸ் நிறுத்தத்தில் பயணிகள் முழுமையாக பஸ்சில் ஏறுவதற்கு முன் அவசரமாக பஸ்சை எடுத்துச் சென்று விடுகின்றனர். பயணிகள் ஓடி வந்து பஸ்சை நெருங்கி விட்ட பின்னரும், பஸ்சில் ஏற்றாமல் தவிர்த்து விட்டு வருகின்றனர். திருவண்ணாமலை மார்க்கத்தில் இருந்து செஞ்சிக்கு ஏராளமான கிராமங்களில் இருந்து தினமும் ஏராளமான பள்ளி, கல்லுாரி மாணவர்களும், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களும் வருகின்றனர். இது போல் அடாவடியாக பயணிகளை தவிர்த்து விட்டு வரும் டிரைவர்களால் அரசுக்கும், போக்குவரத்து நிர்வாகத்திற்கும் கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது. எனவே போக்குவரத்து கழக உயரதிகாரிகள் டிரைவர், கண்டக்டர்களுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கி பயணிகளிடம் ஏற்பட்டுள்ள அதிருப்தியை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ