உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / நகர, ஒன்றிய, பேரூராட்சிகளில் கூடுதலாக செயலாளர் பதவி

நகர, ஒன்றிய, பேரூராட்சிகளில் கூடுதலாக செயலாளர் பதவி

தமிழகத்தில் வரும் சட்டசபை தேர்தலுக்கான நடவடிக்கையை தி.மு.க., தீவிரப்படுத்தி தனித்தனி மண்டல பொறுப்பாளர்களை நியமித்து தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.மேலும், கட்சியில் உள்ள அதிருப்தி நிர்வாகிகளை ஒருங்கிணைக்கும் வகையில், பொறுப்புகளை கொடுத்து தேர்தல் பணியாற்றுவதற்கான உத்திகளையும் கையாள துவங்கியுள்ளது.விழுப்புரத்திற்கு ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளராக பொன்முடி இருந்தார். அதன் பிறகு வடக்கு, தெற்கு மாவட்டமாக பிரிக்கப்பட்டது. நீண்ட காலத்திற்கு பிறகு சமீபத்தில் வடக்கு, தெற்கு, மத்திய மாவட்டமாக பிரிக்கப்பட்டு மஸ்தான், கவுதமசிகாமணி, லட்சுமணன் ஆகியோருக்கு மாவட்ட பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.அதற்கடுத்த நிலையில், தற்போது நகர செயலாளர், ஒன்றிய செயலாளர், பேரூராட்சி செயலாளர் பணியிடங்களையும் பிரித்து தாராளமாக பதவி வழங்குவதற்கான பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். விழுப்புரம் மத்திய மாவட்டத்தில், நீண்ட காலமாக உள்ள விழுப்புரம் நகர செயலாளர் பதவி, இரண்டாக பிரிக்கப்பட உள்ளது. இதேபோல் மிகப்பெரிய கோலியனுார், வானுார், கண்டமங்கலம் ஒன்றியங்கள் போன்றவை ஏற்கனவே மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக நான்காவதாக ஒன்றிய செயலாளர் நியமிக்கப்பட உள்ளனர். இதே போல், தெற்கு, வடக்கு மாவட்டங்களிலும் புதியவர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.இதனால் புதிய நகர, ஒன்றிய, பேரூராட்சி செயலாளர் பதவியைப் பெற கட்சியினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.தி.மு.க.,வில் கடந்த காலங்களில், ஒரு பெரிய நகராட்சிக்கு (40 வார்டு) ஒரே நகர செயலாளர், பெரிய ஒன்றியத்திற்கு (50 கிராமங்கள்) ஒரே ஒன்றிய செயலாளர் என பவர்புல்லாக பதவி வகித்து வந்தனர். தி.மு.க.,வின் கெத்தே ஒன்றிய, நகர, மாவட்ட செயலாளர் பதவிகள்தான். தற்போது 10 கிராமத்திற்கு ஒரு ஒன்றிய செயலாளர், 10 வார்டுக்கு ஒரு நகர செயலாளர் என பிரிக்கப்படுவதால், அவர்களின் பவர்புல் இமேஜ் டம்மியாகும் என பேசப்படுகிறது.இருப்பினும், 4 கிராமங்களுக்கு ஒரு ஒன்றிய செயலாளர் பதவி கொடுத்தாலும், அவர்கள் கெத்தோடு பதவியை பயன்படுத்துவார்கள் என உடன்பிறப்புகள் உறுதியாக சொல்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ