வேளாண் திட்டங்களில் ஒரு சிலரே பயனடைகின்றனர்: குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் புகார்
விழுப்புரம்: விவசாயிகளுக்கான அரசின் வேளாண் திட்டங்களில், குறிப்பிட்டவர்கள் மட்டுமே பயனடைகின்றனர் என விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம், கலெக்டர் பழனி தலைமையில் நேற்று நடந்தது. டி.ஆர்.ஓ., பரமேஸ்வரி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஷோபனா, வேளாண் இணை இயக்குனர் சீனுவாசன் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில் விவசாயிகள் தங்கள் குறைகள் மற்றும் புகார் தெரிவித்து பேசியதாவது:விவசாய பொருள்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு டோல் வசூலிப்பதை நிறுத்த வேண்டும். விவசாயிகள் மனுக்கள் மீது, பல துறையினர் பதில் அளிப்பதில்லை.ஆவணிப்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் விஷக்கடிக்கு மருந்துகள் இருப்பு வைக்க வேண்டும். கால்நடைத்துறை நடமாடும் மருத்துவ வாகனங்கள், கிராமங்களுக்கு வருவதில்லை. அதில் மருந்துகளும் இல்லை. அனைத்து வேளாண் அலுவலகங்களிலும் உளுந்து விதைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தனியார் பண்ணைகளில் கலப்படமாகவும், கிலோ 200 ரூபாய் வரை உயர்வாகவும் விற்கிறது. ஆய்வுசெய்து தரமான விதை கிடைக்கச் செய்ய வேண்டும்.அத்மா திட்டத்தில், வேளாண் சுற்றுலாவிற்கு குறிப்பிட்ட சிலரை மட்டுமே அழைத்துச் செல்கின்றனர். பல திட்டங்கள், பல விவசாயிகளுக்கு தெரிவதில்லை. அனைத்து விவசாயிகளுக்கும், அரசின் வேளாண் திட்டங்களில் வாய்ப்பளிக்க வேண்டும்.பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு, ஒரே மாதிரியான இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும். பயிர்களில் பூச்சி தாக்குதல் அதிகரிப்பதை தடுக்க, வேளாண் அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும்.இவ்வாறு விவசாயிகள் பேசினர்.கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் உறுதியளித்தார்.