ஆலம்பூண்டி கோவில் திருவிழா மோதல் சமாதான கூட்டத்தில் சுமூக முடிவு
செஞ்சி : ஆலம்பூண்டியில் கோவில் திருவிழாவின்போது ஏற்பட்ட மோதல் தொடர்பாக சமாதான கூட்டம் நடந்தது.செஞ்சி அடுத்த ஆலம்பூண்டியில் கடந்த 21ம் தேதி இரவு திரவுபதி அம்மன் கோவில் திருவிழா பேனரை கிழித்தது தொடர்பாக தகராறு ஏற்பட்டது.இதில் ஒரு தரப்பினர் தாக்குதலில் ஈடுபட்டனர். தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தி மற்றொரு தரப்பினர் சாலை மறியல் செய்தனர். இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் சூழல் ஏற்பட்டது.இதையடுத்து நேற்று மாலை செஞ்சி தாலுகா அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடந்தது.தாசில்தார் துரைசெல்வன் தலைமை தாங்கினார். ஏ.டி.எஸ்.பி., தினகரன், டி.எஸ்.பி., மனோகரன் இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு மற்றும் இரு தரப்பை சேர்ந்த 14 பேர் கூட்டத்தில் பங்கேற்றனர்.இரு தரப்பு வாதங்களுக்கு பிறகு, பிரச்சனைக்கு காரணமாக உள்ள ஆட்டோ ஸ்டாண்ட் மற்றும் வார சந்தையை வருவாய்த்துறை மற்றும் போலீசார் முடிவு செய்யும் இடத்தில் அமைத்து கொள்ள இரு தரப்பும் சம்மதித்தனர்.வரும் காலங்களில் மறியலில் ஈடுபட்டால் தேசிய நெடுஞ்சாலை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இருதரப்பினருக்கும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.