சொட்டுநீர் பாசனம் அமைக்க நுாறு சதவீத மானியம் உதவி இயக்குனர் தகவல்
விக்கிரவாண்டி: கோடை கால பயிர் சாகுபடிக்கு சொட்டுநீர் பாசனம் அமைக்க நுாறு சதவீத அரசு மானியம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.விக்கிரவாண்டி வட்டார தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் ஜெய்சன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு;நுண்ணீர் பாசனத் திட்டம் என்பது நீர் சேமிப்புக்கு செழிப்பான துல்லிய பண்ணைக்கு வழிகாட்டும் திட்டம். சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும், பெரு விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் சொட்டுநீர்ப் பாசனம் அமைத்துத் தரப்படும். கோடை காலத்தில் நீர் பற்றாக்குறை நிவர்த்தி செய்து, குறைந்த நீர் செலவில், அதிக பரப்பில் சாகுபடி செய்திடவும், நீரில் கரையும் உரம் மூலம் அதிக மகசூல் காண, இத்திட்டம் பெரிதும் உதவியாக இருக்கும்.சொட்டு நீர் பாசனம் அமைக்கும் விவசாயிகள் தானியங்கி நீர் பாசன முறைகளை பின்பற்றிட தோட்டக்கலை துறை புதிய உயர் தொழில் நுட்பமாகிய ஆளில்லா நீர் பாசன முறையினை ஊக்குவிக்க சிறு, குறு விவசாயிகளுக்கு 22,000 ரூபாய், பெரு விவசாயிகளுக்கு 18,000 ரூபாய் மானியமாக வழங்குகிறது.சொட்டுநீர் பாசனம் பெறும் விவசாயிகளுக்கு துணை நீர் மேலாண்மை திட்டம் செயல்படுத்தபடுகிறது. விவசாயிகள் தங்கள் வயல்களில் சொட்டு நீர் பாசன அமைப்பை நிறுவிட ஏதுவாக மின் மோட்டார், டீசல், சோலார் பம்பு செட்டுகள் வாங்கிட 50 சதவீத மானிய 15,000 ரூபாய், நீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைக்க 50 சதவீத மானியம் 75,000 ரூபாய், நீர் எடுத்து செல்ல பைப் லைன் அமைக்க 10,000 ரூபாய் மானியமாக வழங்குகிறது.தோட்டக்கலை சாகுபடி பரப்பை அதிகரிக்க மானியத்தில் காய்கறி விதைகள், நாற்றுகள், பழ, பூ செடிகள், இதர தோட்டக்கலை சார்ந்த நடப்பு ஆண்டு திட்டங்களுக்கு முன்பதிவு நடக்கிறது. விருப்பமுள்ள விவசாயிகள் பாப்பனப்பட்டு தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் நேரடியாக அல்லது உழவர் செயலி மூலம் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.