வேளாண் உதவி இயக்குனர் ஆய்வு
வானுார்: திருவக்கரை கிராமத்தில் இயந்திரம் மூலம் நெல் நடவு செய்த, விவசாய வயல்களை வேளாண் உதவி இயக்குனர் ஆய்வு மேற்கொண்டார்.சொர்ணவாரி பருவத்தில் இயந்திரம் மூலம், நெல் நடவு செய்துள்ள விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 4 ஆயிரம் வழங்க அரசு, குறுவை சாகுபடி தொகுப்பு திட்டத்தை டெல்டா அல்லாத பிற மாவட்டங்களுக்கும் நடப்பாண்டு முதல் அறிமுகம் செய்துள்ளது. வானுார் வட்டாரத்தில், இதுவரை, 720 ஏக்கர் பரப்பில் இயந்திரம் மூலம் நெல் நடவு செய்யப்பட்டு, விவசாயிகள் உழவர் செயலி வாயிலாக பதிவு செய்துள்ளனர். பதிவு செய்த விவசாய விவரங்களை வேளாண் அலுவலர், துணை வேளாண்மை அலுவலர் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்கள் அடங்கிய குழுக்கள் விவசாயிகளின் வயல்களில் ஆய்வு செய்து அடுத்த வாரம் முதல் அவர்களின் வங்கி கணக்கில் ஏக்கருக்கு ரூ.4 ஆயிரம் பின்னேற்பு மானியமாக வரவு வைக்கப்பட உள்ளது. இதன் ஒரு பகுதியாக எடையப்பட்டு, பொம்பூர், திருவக்கரை மற்றும் கடகம்பட்டு ஆகிய கிராமங்களில் இயந்திரம் மூலம் நெல் நடவு செய்துள்ள வயல்களை வேளாண் உதவி இயக்குனர் எத்திராஜ் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.இந்த ஆய்வின்போது வேளாண் அலுவலர் ரேவதி, உதவி வேளாண் அலுவலர்கள் விஜயலட்சுமி, சுரேஷ் மற்றும் திருவக்கரை விவசாயிகள் உடன் இருந்தனர்.