ஆரம்ப கல்வியில் அசத்தும் அதனுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி
வி ழுப்புரம் அடுத்த அதனுார் கிராமத்தில் கடந்த 1955ம் ஆண்டு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி துவங்கப்பட்டது. 70 ஆண்டுகள் பழமையான இப்பள்ளி துவங்கப்பட்ட நாளில் இருந்து தற்போது வரை ஆரம்ப கல்வியில் தரமான கல்வியை மாணவர்களுக்கு கற்பித்து வருகின்றனர். இப்பள்ளியில் படித்தவர்கள் தற்போது ஆசிரியர்கள், வனத்துறை, வங்கி, ராணுவம், ஊரக வளர்ச்சி துறை, காவல் துறைகளில் பணிபுரிந்து வருகின்றனர். மாணவர்களுக்கு ஆரம்ப கல்வியே, வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கான அடிப்படை கல்வியாக உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு புத்தகங்களில் உள்ள பாடங்களை மாணவர்கள் எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் ஆசிரியர்கள் கற்றுக் கொடுக்கின்றனர். இப்பள்ளியில், ஓராண்டிற்கு முன் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பு துவங்கப்பட்டுள்ளது. மேலும், 'மணற்கேணி ஆப்' மூலம் மாணவர்களுக்கு பாடம் கற்றுத்தரப்படுகிறது. ஒவ்வொரு வெள்ளிக் கிழமைகளில் 30 நிமிடம் மாணவர்களின் தனித்திறமையை வெளிப்படுத்தும் நிகழ்ச்சி மற்றும் யோகா நடத்தப்படுகிறது. பாடங்களை நாடகம், பட்டி மன்றம் மூலம் கற்றுக்கொடுத்து மாணவர்களின் கற்கும் திறனை வளர்க்கின்றனர். ஆரம்ப கல்வியில் ஆங்கில திறமையை வளர்க்க 'ஸ்போக்கன் இங்கிலீஷ்' கற்பிக்கப்படுகிறது. மாணவர்களிடம் ஆங்கிலத்தில் தினந்தோறும் 5 வினாக்கள் கேட்கப்பட்டு, விடைகள் கூறுகின்றனர். இதன் பலனாக, 2ம் வகுப்பு படிக்கும் மாணவி ஆங்கிலத்தில் 9 வரிகளை மனப்பாடமாக கூறும் அளவிற்கு கற்றுக் கொடுத்துள்ளனர். மாணவர்களிடையே விளையாட்டு ஆர்வத்தை துாண்டும் வகையில் செஸ் விளையாட்டு கற்றுத்தரப்படுகிறது. இதைத்தவிர, ஆண்டிற்கு ஒருமுறை கலைத்திருவிழா மற்றும் சுதந்திர தின விழா, குடியரசு தின விழா, ஆசிரியர் தின விழா, குழந்தைகள் தின விழாக்கள் கொண்டாடப்படுகிறது. இந்த நாட்களில் மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசு வழங்குகின்றனர். முல்லை, நெய்தல், மருதம், குறிஞ்சி, பாலை ஆகிய 5 வகை குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளனர். இதற்கு தலா ஒரு மாணவரை தலைவராக தேர்வு செய்தும், மற்ற மாணவர்களை உறுப்பினராக சேர்த்து குழு அமைத்துள்ளனர். இப்படி, கிராமப்புற மாணவர்களுக்கு ஆரம்ப கல்வியில் தரமான கல்வியை கொடுப்பதில் அரசு துவக்கப் பள்ளி ஆசிரியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கல்வியோடு ஒழுக்கமும்
கற்றுத் தரப்படுகிறது
எங்கள் கிராமத்தில் பழமையான இப்பள்ளியில், படித்தது மிகவும் பெருமையாக உள்ளது. ஆரம்ப கல்வியோடு சிறந்த ஒழுக்கத்தையும் கற்றுக் கொடுக்கின்றனர். இங்கு படித்தவர்கள் ஒவ்வொருவரும் அரசு வேலை உள்ளிட்ட நல்ல நிலைக்கு சென்றுள்ளனர். இப்பள்ளி ஆசிரியர்கள், தனியார் பள்ளிகளுக்கு நிகரான கல்வியை கற்றுக் கொடுக்கின்றனர். இப்பள்ளி நுாற்றாண்டைக் கடந்து செயல்பட வேண்டும் என்பதால் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறோம். பள்ளிக்கு தேவையான உதவியை செய்து வருகிறேன். -பாலா, பள்ளி மேலாண்மைக் குழு கல்வியாளர்.
கிராமத்து மாணவர்கள்
சளைத்தவர்கள் அல்ல
கிராமத்து மாணவர்கள் எதிலும் சளைத்தவர்கள் அல்ல என்ற நிலைக்கு அவர்களை தயார் படுத்தி வருகிறோம். இந்த காலத்தில் ஆங்கில கல்வியை நோக்கி மாணவர்கள் ஓடும் நிலை உள்ளது. இதனால், ஒன்றாம் வகுப்பில் இருந்து போனிக்ஸ் முறையில் தினமும் ஸ்போக்கன் இங்கிலீஷ் கற்று கொடுக்கின்றோம். அனைத்து அரசு விழாக்களிலும் மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தி ஊக்குவித்து வருகிறோம். மாணவர்களுக்கு சிறப்பான கல்வியை கற்றுத்தருவதே எங்களின் குறிக்கோளாக வைத்துள்ளோம். -யூஜின் நிர்மலா, தலைமை ஆசிரியை
சிறப்பான ஆரம்ப கல்வி
நான் ஆரம்ப கல்வியை இப்பள்ளியில் பயின்றேன். அரசு துறையில் இளநிலை உதவியாளராக பணியில் சேர்ந்து துணை பி.டி.ஓ., பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளேன். இங்கு படித்த எனது தங்கையும் கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரிந்தார். ஆரம்ப கல்வியை சிறப்பாக கற்றுக்கொடுத்தனர். நாங்கள் படித்ததைவிட தற்போது கல்வி கற்பிக்கும் தரம் உயர்ந்துள்ளது. அப்போது இருந்த தலைமையாசிரியர், ஆசிரியர்கள் போன்று தற்போதுள்ள தலைமையாசிரியர், ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் பணிபுரிகின்றனர். -இமயவர்மன், ஓய்வு பெற்ற துணை பி.டி.ஓ.,
தங்கள் குழந்தைகள் போல
எங்களை கவனித்தனர்
நான் படித்தபோது, பள்ளி ஆசிரியர்கள் எங்களை தங்கள் குழந்தைகளைப் போன்று பார்த்துக் கொண்டனர். இப்போதும் அப்படியே தான் இருக்கின்றனர். தமிழ் வழியில் படித்தேன் என்பதில் பெருமையாக உள்ளது. அரசு பள்ளிகளில் தற்போது அனைத்து வசதிகளும் உள்ளது. நாங்கள் பள்ளி வளாகத்தில் வைத்த மரக்கன்றுகள் தற்போது மரங்களாக மாறியுள்ளது. எனக்கு கற்றுக்கொடுத்த ஆசிரியரே, தற்போது தலைமை ஆசிரியராக இருப்பது பெருமையாக உள்ளது. -கார்த்தி. வனக்காப்பாளர், செஞ்சி.