பராமரிப்பில்லாத மைதானம் விளையாட்டு வீரர்கள் அவதி
விழுப்புரம்: விழுப்புரத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானத்தில் போதிய பராமரிப்பு இன்றி கிடப்பதால், விளையாட்டு வீரர்கள் சிரமப்படுகின்றனர். விழுப்புரம் அரசு கலை கல்லுாரி வளாகத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மாவட்ட விளையாட்டு மைதானம் உள்ளது. இங்கு, தடகளம், கைப்பந்து, கால்பந்து உள்ளிட்டவைக்கு விளையாட்டு வீரர்கள் பயிற்சி பெறுவர். இந்த மைதானத்தில் போதிய பராமரிப்பு இல்லாததால் விளையாட்டு மைதானத்தில் செடி கொடிகள் படர்ந்து சுகாதாரமற்று கிடக்கிறது. கைப்பந்து மைதானத்தில் ஆங்காங்கே, சேறும் சகதியுமாக மண் குவிந்து கிடக்கிறது. மைதானத்தை சுற்றிலும், குப்பைகளும் சிதறி கிடக்கிறது.மாலை நேரத்தில் பயிற்சி மேற்கொள்ள போதிய மின் விளக்கு வசதியும் இல்லை. விளையாட்டு வீரர்களும் வேறு வழியின்றி, தங்களின் பயிற்சியை அதே மைதானத்தில் மேற்கொண்டு வருகின்றனர். மைதானத்தை விளையாட்டு வீரர்கள் மட்டுமின்றி, நடைபயிற்சி செல்வோரும் பயன்படுத்துகின்றனர்.விழுப்புரம் நகரில் விளையாட்டு வீரர்கள் பயிற்சி பெறுவதற்கு போதிய வசதிகளுடன் கூடிய வேறு மைதானம் ஏதும் கிடையாது. தற்போதுள்ள அரசு மைதானத்தை முறையாக பராமரித்து மேம்படுத்தினால் மேலும் பல விளையாட்டு வீரர்கள் பயிற்சி பெற ஏதுவாக இருக்கும். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு, விளையாட்டு மைதானத்தை மேம்படுத்த வேண்டும்.