விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அலுவலகத்தில் தடகள பயிற்சியாளர் சஸ்பெண்ட் பெண் ஊழியர்கள் குஸ்தி
விழுப்புரத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அலுவலகத்தில் பணிபுரிந்த பெண் ஊழியர்கள் தாக்கிக் கொண்ட சம்பவத்தில் தடகள பயிற்சியாளர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லுாரி மைதானத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு, தடகள பயிற்சியாளராக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார்.இவருக்கும், இந்த அலுவலகத்தில் தற்காலிக அலுவலக உதவியாளராக பணிபரிந்த மற்றொரு பெண்ணுக்கும் இடையே ஏற்பட்ட ஈகோ பிரச்னைகளால் அவர்களுக்குள் பல முறை கருத்து மோதல்கள் ஏற்பட்டது.இது முற்றிய நிலையில், சில தினங்களுக்கு முன், இருவரும் ஒருவரை ஒருவர் அலுவலகத்திலேயே தாக்கிக் கொண்டனர். இதையறிந்த, மாவட்ட விளையாட்டு அலுவலர், இருவரையும் கண்டித்தோடு மண்டல முதுநிலை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.அதனைத் தொடர்ந்து, தற்காலிக பெண் ஊழியர் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். பெண் தடகள பயிற்சியாளரை 'சஸ்பெண்ட்' செய்து, விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தடகள பயிற்சியாளர் இல்லாததால் தடகள விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பயிற்சியில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து விளையாட்டு அலுவலரை கேட்ட போது, விரைவில் தடகள பயிற்சியாளர் நியமிக்கப்பட உள்ளார் என தெரிவித்துள்ளார்.