மேலும் செய்திகள்
ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்
30-Oct-2024
விழுப்புரம் ; விழுப்புரம் அருகே காணை ஒன்றியம் அரியலுார் திருக்கை, டட் நகர் ஊராட்சிகளின் எல்லை பிரிப்பு பணிகளை அரசு மேற்கொண்டுள்ள நிலையில், அரியலுார் திருக்கை மக்களின் கருத்தை கேட்காமல், பாரபட்சமாக நடவடிக்கை எடுப்பதை கண்டித்து, கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.கலெக்டர் பெருந்திட்ட வளாக வாயில் பகுதியில், நேற்று காலை 11:30 மணிக்கு அயிலுார் திருக்கை கிராம மக்களை 200க்கும் மேற்பட்டோர் ஊராட்சி தலைவர் வனிதா நாகராஜன், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் தலைமையில் அமர்ந்து முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் தெரிவித்ததாவது:அரியலுார் திருக்கை ஊராட்சியை, கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் பிரித்து, டட் நகர் ஊராட்சி நிர்வாகம் தனியாக செயல் படுகிறது. இந்நிலையில், திடீரென அரியலுார் திருக்கை, டட் நகர் ஊராட்சி எல்லையை வரையறை செய்வதாக, வருவாய்த்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.இதுகுறித்து அரியலுார் திருக்கை மக்களிடம் கருத்து கேட்காமல், இங்குள்ள 70 சதவீதம் நிலப்பகுதியை, டட் நகர் எல்லையில் சேர்க்க வரை படம் தயாரித்துள்ளனர்இது குறித்து, கடந்த நவம்பர் 11ம் தேதி கிராம மக்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்தி, அரியலுார் திருக்கை ஊராட்சி நிலப்பகுதியை இங்கேயே தொடர செய்ய வேண்டும் என முடிவெடுத்து, தீர்மானமும் போடப்பட்டது.இது குறித்து, தாலுகா அலுவலகம் மற்றும் ஆர்.டி.ஓ., அலுவலகத்திலும் மனு அளிக்கப்பட்டது.ஆனால், கடந்த இரண்டு மாத காலமாக இவர்கள் ரகசியமாக ஊராட்சி எல்லை பிரிக்கும் பணிகளை மேற்கொண்டு விட்டு, எங்களுக்கு கடந்த 15ம் தேதி தான் கருத்து கேட்பு கூட்டம் என தகவல் அளித்தனர்.அப்போது, எங்கள் ஊர் ஏரி மற்றும் நிலப்பரப்பை டட் நகரில் சேர்ப்பதாக குறிப்பிட்டனர். இதனால், எங்கள் ஊராட்சி நிலப்பரப்பும், ஏரி மூலம் நடக்கும் தேசிய ஊரக வேலைத் திட்டமும் பாதிக்கப்படும் என குறிப்பிட்டோம்.ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், ஒருதலை பட்சமாக எல்லை பிரிக்கும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.இது குறித்து, கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்றனர்.இதனையடுத்து, போலீசார் அறிவுறுத்தலின் பேரில், ஊராட்சி தலைவர் தலைமையில், பிரதிநிதிகள் கலெக்டர் பழனியை சந்தித்து மனு அளித்து பேசினர்.அப்போது, டிசம்பர் முதல் வாரத்தில் இப்பிரச்னை குறித்து பேசி, தீர்வு காணப்படும் என கலெக்டர் உறுதியளித்தார். இதனையேற்று கிராம மக்கள், மதியம் 12:45 மணிக்கு முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
30-Oct-2024