பா.ம.க, ராமதாஸ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
திண்டிவனம்: வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து, தைலாபுரத்தில் உள்ள பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வீட்டில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் உள்ள பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வீட்டிலும், சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது மகன் அன்புமணி வீட்டிலும் வெடிகுண்டு வைத்திருப்பதாக, சென்னை டி.ஜி.பி., அலுவலகத்திற்கு இ - மெயில் மூலம் மர்ம நபர் மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து, டி.ஜி.பி., அலுவலக எச்சரிக்கையை தொடர்ந்து, வெடிகுண்டு நிபுணர்கள், நேற்று காலை, 11:10 மணிக்கு, ராமதாஸ் இல்லத்திற்கு மோப்ப நாயுடன் விரைந்தனர். பகல், 12:40 மணி வரை வீடு முழுதும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், வெடிகுண்டு இல்லை என்று அறிவித்தனர். இருப்பினும், மிரட்டலை தொடர்ந்து, ராமதாஸ் வீட்டுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.