உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஆம்னி பஸ்சில் சிறுமிக்கு தொல்லை பஸ் டிரைவர் போக்சோவில் கைது

ஆம்னி பஸ்சில் சிறுமிக்கு தொல்லை பஸ் டிரைவர் போக்சோவில் கைது

விழுப்புரம்: கேரளாவில் இருந்து சென்னை சென்ற ஆம்னி பஸ்சில், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த டிரைவரை பயணிகள் பிடித்து, விழுப்புரம் போலீசில் ஒப்படைத்தனர். கேரள மாநிலம் கண்ணுார் பகுதியிலிருந்து சென்னைக்கு, நேற்று முன்தினம் தனியார் ஆம்னி சொகுசு பஸ் சென்றது. தமிழக, கேரள மாநிலத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். விருதுநகர் மாவட்டம், பாளையம்பட்டியை சேர்ந்த முனியாண்டி மகன் ஞானவேல், 40; ஒட்டி சென்றார். நேற்று முன்தினம் நள்ளிரவு, கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே பஸ் வந்தபோது, டிரைவர் ஞானவேல், வேறு டிரைவரை மாற்றிவிட்டு, பஸ்ஸில் ஓய்வெடுக்க போனார். அப்போது, ஓய்வெடுக்கும் பகுதி அருகே சீட்டில் படுத்து துாங்கி கொண்டிருந்த, 9 வயது சிறுமிக்கு டிரைவர் ஞானவேல், பாலியல் தொல்லை கொடுத்தார். மேலும் அவரது மொபைல் போனில் சிறுமியை படம் எடுத்தார். இதைக்கண்ட சக பயணிகள் டிரைவரிடம் தட்டிகேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பஸ் காலை 6:00 மணியளவில் விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் பஸ்சை நிறுத்தி, அங்குள்ள புறக்காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அங்கிருந்து விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு, பயணிகளுடன் பஸ் கொண்டு செல்லப்பட்டது. இது தொடர்பாக போலீசார், விசாரித்தனர். டிரைவரின் மொபைல் போனை பார்த்தபோது அவர் சிறுமியை படம் எடுத்தது தெரிந்தது. இது குறித்த புகாரின் பேரில், விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசார் ஞானவேல் மீது போக்சோ பிரிவில் வழக்கு பதிந்து கைது செய்தனர். அதையடுத்து, பயணிகளுடன் அந்த பஸ்சை போலீசார் அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை