தண்ணீர் டேங்கர் மீது பஸ் மோதி விபத்து பஸ் டிரைவர் பலி: 17 பயணிகள் காயம்
வானுார்: திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிய போது, டேங்கர் லாரி மீது, அரசு பஸ் மோதிய விபத்தில், பஸ் டிரைவர் உயிரிழந்தார்.புதுச்சேரியில் இருந்து 38 பயணிகளை ஏற்றிக் கொண்டு நேற்று மதியம் 1:00 மணிக்கு, தமிழக அரசு விரைவு பஸ் சென்னைக்கு சென்று கொண்டிருந்தது. பஸ்சை துாத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் மாரிமுத்து, 45; ஓட்டிச் சென்றார்.புதுச்சேரி-திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் ஓமந்துார் அருகே பஸ் சென்றபோது, டோல்கேட் ஒப்பந்த தொழிலாளர்கள் சென்டர் மீடியனில் நின்று கொண்டு, டேங்கர் லாரியின் மூலம் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்தனர். அப்போது, அரசு பஸ் எதிர்பாராத விதமாக டேங்கர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.இதில், பஸ்சின் முன்பக்கம் உருகுலைந்ததோடு, பஸ் டிரைவர் மாரிமுத்து, சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். பஸ்சில் பயணித்த ராமநாதபுரத்தை சேர்ந்த பஸ் கண்டக்டர் சேகர், 50; உட்பட 17 பேர் காயமடைந்தனர்.தகவலறிந்த கிளியனுார் போலீசார் மற்றும் திண்டிவனம் தீயணைப்பு வீரர்கள், இறந்த டிரைவர் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக பிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். செடிகளுக்கு தண்ணீர் ஊற்றியவர்கள் சாலையில் நிற்காமல் சென்டர் மீடியனில் நின்றதால் உயிர் தப்பினர். விபத்தில் சிக்கிய பஸ், ஜே.சி.பி., இயந்திரம் மூலம் அகற்றப்பட்டதால் போக்குவரத்து சீரானது.விபத்து குறித்து கிளியனுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
எச்சரிக்கை இல்லாததால் தொடர் விபத்து
கடந்த மார்ச் 30ம் தேதி புதுச்சேரி - திண்டிவனம் சாலையில், தைலாபுரம் அருகே டிராக்டர் மூலம் சென்டர் மீடியன் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தனர். அப்போது, திண்டிவனம் நோக்கி சென்ற கார், தண்ணீர் டேங்கரின் பின்பக்கம் மோதியது. இந்த விபத்தில் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்த கொந்தமூர் காலனி தெய்வநாயகம், 54; சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து நடந்து 2 மாதங்களுக்குள் மீண்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.மொரட்டாண்டி டோல்கேட் மூலம் சென்டர் மீடியன் செடிகளை பராமரிக்க டெண்டர் எடுப்பவர்கள், தண்ணீர் ஊற்றுவதற்கு ஒப்பந்த தொழிலாளர்களை நியமிப்பதுடன் தங்களின் கடமை முடிந்து விட்டது என நினைக்கின்றனர். தண்ணீர் டேங்குகளை சாலையில் நிறுத்தும்போது, எந்தவித எச்சரிக்கை சிக்னல்களும் இல்லாமல் நிறுத்தி தண்ணீர் ஊற்றுவதால் தொடர் விபத்து ஏற்படுவதோடு, விலை மதிப்பில்லாத மனித உயிர்களும் பலியாகி வருவதை அவர்கள் உணர வேண்டும்.