மானியத்தில் புல் நறுக்கும் கருவி விண்ணப்பிக்க அழைப்பு
விழுப்புரம்: சிறு, குறு விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் மின்சாரத்தால் இயங்கும் புல் நறுக்கும் கருவிகளுக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் செய்திக்குறிப்பு; 2026–27ம் ஆண்டு சிறு, குறு விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானியத்தில் மின்சார மூலம் இயங்கும் புல் நறுக்கும் கருவிகள் 80 பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்திற்கு கால்நடை பராமரிப்புத்துறை மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். கடந்த, 5 ஆண்டுகளில், எந்தவொரு அரசாங்க திட்டத்தின் கீழும் புல் நறுக்கும் கருவி பெற்றிருக்கக்கூடாது. புல் நறுக்கும் கருவி விலையில் 50 சதவீதத்தையோ அல்லது ஒப்பந்தப்புள்ளி செயல்முறையின் மூலம் இறுதி செய்யப்படும் விகிதத்தின் அடிப்படையிலோ நிர்ணயிக்கப்படும் பயனாளர் பங்களிப்பை வழங்க தயாராக இருக்க வேண்டும். பெண் விவசாயிகள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், ஆதரவற்ற விதவைகள், கைவிடப்பட்ட பெண்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் கிராமத்திற்கு அருகில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனை, கால்நடை மருந்தகத்தை அணுகி பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.