விழுப்புரம் மாவட்டத்தில் மழை பாதிப்பு மத்திய குழுவினர் நேரில் ஆய்வு
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை, வெள்ளத்தால் பாதித்த பகுதிகளை, மத்திய குழுவினர் நேரில் பார்வையிட்டனர்.விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பகுதியில் பெஞ்சல் புயல் மற்றும் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட, மத்திய அரசின் அதிகாரிகள் குழுவினர் நேற்று காலை வந்தனர்.கலெக்டர் அலுவலகத்தில், மத்திய குழுவினர், கலெக்டர் பழனி உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் வெள்ள சேத மதிப்புகள் குறித்து ஆய்வு கூட்டம் நடத்தினர்.பகல் 12:00 மணி முதல் 12:45 மணி வரை ஆய்வு நடத்திய பின், மத்திய அரசின் அதிகாரிகள், இரண்டு குழுக்களாக பிரிந்து, மாவட்டத்தில் பல்வேறு இடங்களை, நேரில் சென்று பார்வையிட்டனர்.மத்திய அரசின் இணை செயலாளர் நஜேஷ் குப்தா தலைமையிலான குழுவினர், அரசூர் அருகே உள்ள மலட்டாறு பகுதியை ஆய்வு செய்தனர். அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுடன் குறைகளை கேட்டு அறிந்தனர். அதனைத் தொடர்ந்து திருக்கோவிலுார் சட்டசபை தொகுதியில் பல்வேறு இடங்களில் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு, ஆய்வு செய்தனர்.விக்கிரவாண்டி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் சேதமடைந்த விளை பொருட்களை பார்வையிட்டு, வியாபாரிகளிடம் குறைகளை கேட்டனர் . பாதிப்புகள் குறித்து மதிப்பீடு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வியாபாரிகளிடம் மத்திய குழுவினர் தெரிவித்தனர்.அரசு முதன்மை செயலாளர் அமுதா, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுன்சோங்கம்ஜடக், கலெக்டர் பழனி, திண்டிவனம் சப் -கலெக்டர் திவ்யான் சு நிகம், வேளாண் இயக்குனர் பிரகாஷ், எஸ்.பி., தீபக் சிவாச் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.