மேலும் செய்திகள்
கடைகளில் தமிழில் பெயர் பலகை வைக்க அறிவுறுத்தல்
04-Apr-2025
விழுப்புரம்; தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கடைகள், உணவு நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைப்பது தொடர்பாக மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கி பேசியதாவது:அனைத்து கடைகள், நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் உட்பட அனைத்து வகை தொழிற்சாலைகள் மற்றும் தனியார் பள்ளிகள், கல்லுாரிகள் தமிழில் பெயர் பலகை வைப்பது தொடர்பாக எனது தலைமையில் மாவட்ட அளவிலான குழு அமைக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் துறை, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கம், தமிழ் வளர்ச்சி துறை, உள்ளாட்சி துறை, வணிகர் சங்கங்கள், நிறுவனங்களின் சங்கங்கள் தொழிற்சாலைகளின் கூட்டமைப்புகள் உறுப்பினராக செயல்பட்டு வருகின்றனர்.இந்த குழுவினர் அனைத்து கடைகள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள், பள்ளி, கல்லுாரிகளில் தமிழ் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் மே 15ம் தேதிக்குள் நுாறு சதவீதம் தமிழ் பெயர் பலகை வைக்கப்படுவதை உறுதி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.இதன் பின், தமிழ் பெயர் பலகை வைக்காத நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு, அபராதம் விதிக்க சம்பந்தபட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.விழுப்புரம் மாவட்டத்தில் இயங்கும் அனைத்து கடைகள், வணிகர் சங்கங்கள், உணவு நிறுவனங்கள், பள்ளி, கல்லுாரிகள், தொழிற்சாலைகள் தங்கள் உறுப்பினர்களுக்கு இந்த தகவலை கூறி, தமிழ் பெயர் பலகை நுாறு சதவீதம் அமைக்க மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.இவ்வாறு கலெக்டர் பேசினார்.மாவட்ட வருவாய் அலுவலர் அரிதாஸ், சப்கலெக்டர் திவ்யான்சு நிகாம், தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மீனாட்சி உட்பட பலர் பங்கேற்றனர்.
04-Apr-2025