திண்டிவனம் நகர் மன்ற கூட்டத்தில் பெண் கவுன்சிலர் வெளியேறியதால் பரபரப்பு
திண்டிவனம்: திண்டிவனம் நகர மன்றக் கூட்டத்தில் இருந்து பெண் கவுன்சிலர்கள் ஒட்டுமொத்தமாக வெளியேறியதால் பரபரப்பு நிலவியது. திண்டினம் நகர மன்றத்தின் அவசரக் கூட்டம் நேற்று சேர்மன் நிர்மலாரவிச்சந்திரன் தலைமையில் நடந்தது. துணை சேர்மன் ராஜலட்சுமி வெற்றிவேல், கமிஷனர் குமரன், அதிகாரிகள் மற்றும் கவுன்சிலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நகராட்சி வளர்ச்சி பணி தொடர்பாக கொண்டு வரப்பட்ட 22 தீர்மானங்களை நகராட்சி அலுவலர் படித்தார்.அப்போது, தி.மு.க.,கவுன்சிலர் லதாசாரங்கபாணி, குறுக்கிட்டு, எங்களுக்கு பொங்கல் வேலை உள்ளது. தீர்மானத்தை படிக்காமல், கூட்டத்தை விரைவாக முடிக்க கூறினார். அப்போது கவுன்சிலர்கள் பலர் பொங்கல் நேரத்தில் ஏன் கூட்டம் நடத்துகிறீர்கள். வேறு நாளில் நடத்த வேண்டியது தானே என்றனர். தொடர்ந்து பேசிய அ.தி.மு.க., கவுன்சிலர் தங்கள் வார்டுகள் புறக்கணிக்கப்படுவதாக குற்றம் சாட்டினர். பா.ம.க., கவுன்சிலர் மணிகண்டன், தங்கள் பகுதியில் பாதாள சாக்கடை பணி நடைபெற்ற இடத்தில் புதிய சாலை போடவிபல்லை என சேர்மனை முற்றுகையிட்டு பேசினார். அப்போது, மன்றத்தில் இருந்த அனைத்து கட்சிகளை சேர்ந்த பெண் கவுன்சிலர்கள் ஒட்டுமொத்தமாக அரங்கை விட்டு வெளியேறினர். இதனால், பரபரப்பு நிலவியது. அதனைக் கண்ட சேர்மன், கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட 22 தீர்மானங்களும் நிறைவேறியதாக அறிவித்தார்.