உள்ளூர் செய்திகள்

கிரைம் செய்திகள்...

ஆற்றில் மூழ்கிய வாலிபர்

திருவெண்ணெய்நல்லுார்: விழுப்புரம், மணி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராமர் மகன் சின்னசாமி, 28; இவர் நேற்று மாலை 5:00 மணியளவில் ஏனாதிமங்கலம் தென்பெண்ணை ஆற்றில் குளித்தபோது நீரில் மூழ்கினார். தகவல் அறிந்த திருவெண்ணெய்நல்லுார் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று தண்ணீரில் இறங்கி மாலை 6:30 மணி வரை தேடினர். அவர் கிடைக்காததால். இன்று மீண்டும் தேடும் பணியில் ஈடுபட உள்ளனர்.திருவெண்ணெய்நல்லுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொழிலாளி மாயம்: போலீஸ் விசாரணை

விழுப்புரம்: கல்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி, 64; கட்டட தொழிலாளி. கடந்த 7ம் தேதி, கண்டமங்கலத்திற்கு, வேலைக்குச் சென்றவர், வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அவரது மனைவி லட்சுமி, 47; கொடுத்த புகாரின் பேரில், காணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

பெண் தாக்கு: ஒருவர் மீது வழக்கு

விழுப்புரம்: வளவனுார் அடுத்த நரையூர் காலனியை சேர்ந்தவர் சரவணன், 42; பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் பன்னீர்தாஸ், 48; இவர்களுக்குள், பொது வழி தொடர்பாக முன்விரதம் இருந்தது. கடந்த 7ம் தேதி, சரவணன் மனைவி கலைச்செல்வி, 32; அந்த வழியாக சென்றபோது, பன்னீர்தாஸ் தாக்கி, மிரட்டல் விடுத்துள்ளார். சரவணன் கொடுத்த புகாரின் பேரில், பன்னீர்தாஸ் மீது வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

குட்கா விற்ற பெண் கைது

விழுப்புரம்: வளவனுார் சப் இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார், நேற்று முன்தினம் தொடர்ந்தனுார் கிராமத்தில் கந்தசாமி மனைவி கனகவள்ளி, 39; என்பவரது பெட்டிக் கடையை சோதனை செய்தனர். அப்போது அங்கு 1,020 கிலோ கொண்ட 102 குட்கா பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது. அவற்றை கைப்பற்றிய போலீசார், கனகவள்ளியை கைது செய்தனர். கடைக்கு குட்கா சப்ளை செய்த பண்ருட்டியைச் சேர்ந்த தாண்டவமூர்த்தி மீது, வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.

தீ விபத்தில் வீடு சேதம்

திருவெண்ணெய்நல்லுார்: எரலுார் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பாயி, 60; கூலித் தொழிலாளி. இவரது கூரை வீடு நேற்று முன்தினம் இரவு 9:00 மணியளவில் மின் தீ பிடித்து எரிந்தது. திருவெண்ணெய்நல்லுார் தீயணைப்பு நிலையத்தினர் தீயை அணைத்தனர். இதில் வீட்டில் இருந்த பொருட்கள் முழுதும் எரிந்து நாசமானது. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

மது பாட்டில் கடத்தியவர் கைது

மயிலம்: பரிக்கல்பட்டு பஸ் நிறுத்தம் அருகே மயிலம் சப் இன்ஸ்பெக்டர் சுதா மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக பைக்கில் வந்த நபரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், புதுச்சேரியில் இருந்து 50 மது பாட்டில்கள் கடத்திவந்தது தெரியவந்தது. விசாரணையில், வேங்கை கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி மகன் கார்த்திக் 25; என்பது தெரிய வந்தது. உடன் போலீசார் வழக்குப் பதிந்து கார்த்திக்கை கைது செய்தனர்.

பெண் தாக்கு: 8 பேர் மீது வழக்கு

கள்ளக்குறிச்சி: லக்கிநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் சதிஷ் மனைவி லட்சியா, 20; இவரது மாமியார் கங்கா. இருவருக்குமிடையே கடந்த 10 நாட்களுக்கு முன் குடும்ப தகராறு ஏற்பட்டது. அப்போது கங்கா உறவினரான அய்யாசாமி மனைவி அமுதா, லட்சியாவை திட்டினார். இந்த முன்விரோதம் காரணமாக கடந்த 5ம் தேதி ஆலத்துார் சிவன் கோவிலில் நடந்த உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு லட்சியா மற்றும் அவரது தந்தை லட்சுமிநாதன் சென்றுள்ளனர். அங்கு மீண்டும் ஏற்பட்ட தகராறில் அமுதா, அவரது கணவர் அய்யாசாமி, ரமேஷ், பாக்கியராஜ், சண்முகம் உட்பட 8 பேர் லட்சியா, லட்சுமிநாதன் ஆகியோரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் அய்யாசாமி, அமுதா உட்பட 8 பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

வட்டார வேளாண் மையத்தில் திருட்டு

ரிஷிவந்தியம்: வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை கடந்த நவம்பர் 29ம் தேதி வேளாண் உதவி இயக்குனர் ஷியாம்சுந்தர் மூடி விட்டு, கள ஆய்வுக்காக வெளியே சென்றார். தொடர்ந்து அன்று மாலை வந்து பார்த்த போது அலுவலகத்தின் ஜன்னல் கண்ணாடி உடைக்கப்பட்டு, அலுவலகத்தில் இருந்த கம்ப்யூட்டர் மானிட்டர் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து நேற்று முன்தினம் ஷியாம் சுந்தர் அளித்த புகாரின் பேரில், பகண்டைகூட்ரோடு போலீசார் நேற்று வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

திண்டிவனம்: கீழ்பென்னாத்துார் அடுத்த செய்யலேரி கிராமத்தைச் சேர்ந்தவர் பஞ்சமூர்த்தி, 47; இவர் நேற்று பிற்பகல் இ-சேவை மையத்திற்கு மின் இணைப்பு கொடுக்கும் கொடுக்க வந்தவாசி சாலையில் பட்டணம் கிராம மெயின்ரோட்டில் கம்பம் நடும் பணியில் ஈடுபட்டபோது, மின் கம்பி மீது கம்பம் சாய்ந்து மின்சாரம் பாய்ந்ததில் பஞ்சமூர்த்தி மீது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். ரோஷணை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அண்ணனை தாக்கிய தம்பி கைது

கள்ளக்குறிச்சி: ஏமப்பேர் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ், 39; இவரது சகோதரர் மணிகண்டன், 34; இவர்களுக்கு சொந்தமாக ஏமப்பேரில் உள்ள வீட்டை விற்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதில், மணிகண்டன் ஆத்திரமடைந்து ரமேைஷ தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார். புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து மணிகண்டனை கைது செய்தனர்.

குட்கா விற்ற கடைக்காரர் கைது

கள்ளக்குறிச்சி: ரங்கநாதபுரம் பகுதியில் சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் நேற்று மதியம் 2:00 மணியளவில் சோதனையில் ஈடுபட்டனர். அதில் தெய்வசகாயம், 58; என்பவரது பெட்டிக்கடையில் குட்கா பொருட்கள் பதுக்கி விற்பனை செய்தது தெரியவந்தது. உடன், 4,830 ரூபாய் மதிப்புள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்து, தெய்வசகாயம் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர். மேலும், தப்பியோடிய அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு பெட்டிக்கடை உரிமையாளர் மரியபிரகாசம் மகன் ஸ்டீபன்ராஜ் என்பவரை தேடி வருகின்றனர்.

லேப்டாப் திருடியவர் கைது

கள்ளக்குறிச்சி: சேலம் மாவட்டம், தலைவாசல் அடுத்த வடக்குகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன், 34; இவர் கடந்த 7ம் தேதி அதிகாலை 4:45 மணிக்கு கள்ளக்குறிச்சியிலிருந்து தனது வீட்டிற்கு சென்றார். அப்போது கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் தனது லேப்டாப் பேக்கினை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றுள்ளனர். முருகன் கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ