மயிலத்தில் பெஞ்சல் புயல் பாதிப்பு கன மழையால் ஏரி, குளங்கள் உடைப்பு
மயிலம் : மயிலத்தில் பெஞ்சல் புயல் காரணமாக மழை நீர் வரத்து அதிகரித்ததால் ஏரி, குளங்கள் உடைந்தது.விழுப்புரம் மாவட்டம், மயிலத்தில் பெஞ்சல் புயல் காரணமாக நேற்று முன்தினம் இரவு முதல் பலத்த காற்றுடன் மழை பெய்தது.வரலாறு காணாத வகையில் 51 செ.மீ., மழை கொட்டித் தீர்த்தது. இதனால் மயிலம் தென் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்து, உபரி நீர் வெளியேற வழியின்றி மதகு அருகில் உள்ள கரை பகுதியில் உடைப்பு ஏற்பட்டது.இந்த தண்ணீர் குடியிருப்பு பகுதிகளை, நேற்று முன்தினம் இரவு 12:30 மணியளவில் சூழ்ந்தது.திடீரென ஏரி உடைந்து, வீடுகளில் தண்ணீர் புகுந்ததால், கிராம மக்கள் அலறி அடித்துக் கொண்டு மேடான பகுதிக்கு சென்றனர்.புதுச்சேரி-திண்டிவனம் ரோட்டில் புதிதாக நான்கு வழி சாலைக்காக சாலை ஓரத்தில் கால்வாய் அமைக்கும் பணி துவக்கப்பட்டது. இப்பணிகள் முடிவடையாததால், பல இடங்களில் மழை நீர் தேங்கி நிற்கிறது.கூட்டேரிப்பட்டு ரெட்டணை ரோட்டில் ஏரிப்பகுதியில் இருந்து மிக அதிகளவில் தண்ணீர் செல்கிறது. இதனால் சாலையை கடந்து செல்வதற்கு பொதுமக்கள் மிகுந்த அவதியடைந்தனர்.மயிலம் அடுத்ததால் காட்ராம்பாக்கம் ஏரியில் தண்ணீர் அதிகரித்து, ஏரி கரை உடைந்து வயல்வெளியில் நீர் புகுந்தது. நெடி, மோழியனூர் பகுதியில் உள்ள சங்கராபரணி ஆற்றில் தண்ணீர் கரை புரண்டு, வயல்வெளியில் புகுந்தது.இதேபோல், மயிலம் அடுத்த வீடூர் அணை, ஆத்திக்குப்பம், அங்கணிக்குப்பம் கணபதிபட்டு, வீடூர் பாதிராப்புலியூர், ஆலப்பாக்கம், கொரலூர் கள்ளக்கொளத்தூர், அவ்வையார்குப்பம், ரெட்டணை, தீவனுார் ஆகிய ஊர்களில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.