மேலும் செய்திகள்
பாதாள சாக்கடை மேன்ஹோல் அடைப்பால் பொதுமக்கள் அவதி
13-May-2025
விழுப்புரம்: விழுப்புரம் நகராட்சியில் பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் நிறைவடைந்த நிலையில், பல்வேறு பகுதிகளில் அடைப்பு ஏற்பட்டு விஷவாயு உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.விழுப்புரம் நகராட்சியில், வணிக நிறுவனங்கள், குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரை சுத்திகரித்து வெளியேற்ற, கடந்த 2022ம் ஆண்டு ரூ. 263 கோடி மதிப்பில், பாதாள சாக்கடை திட்டம் துவக்கப்பட்டது. இதில், 14,150 குடியிருப்புகளை இணைத்து, 165.68 கி.மீ., நிளத்திற்கு பாதாள சாக்கடை குழாய்கள் அமைக்கப்பட்டது. நகர பகுதியில் சேகரமாகும் கழிவுநீரை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் எருமனந்தாங்கல், சாலாமேடு பகுதியில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் சுத்திகரித்து விவசாயத்திற்கு பயன்படும் வகையில் நீரை வெளியேற்றி வருகின்றனர்.இந்த பாதாள சாக்கடை பணி முடிவடைந்தும், கழிவுநீர் குடியிருப்புகளை சூழ்ந்து நிற்பது தொடர் கதையாக உள்ளது. விழுப்புரம் நகரில் பாதாள சாக்கடை பைப் லைன்களில் பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் வெளியேறி குளமாக சூழ்ந்து நிற்கும் நிலை நீடிக்கிறது. இதை கண்காணித்து சரிசெய்ய வேண்டிய, நகராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் 'குறட்டை' விட்டு துாங்கி கொண்டுள்ளனர். பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு வீடுகளுக்குள் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், சில இடங்களில் விஷ வாயு தாக்க துவங்கி உள்ளது. தாமரைக் குளம், பெரிய காலனி பகுதிகளில் ஒரு பெண், ஒரு ஆண் விஷவாயு தாக்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.கடந்த சில மாதத்திற்கு முன்பு புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் பாதாள சாக்கடை வழியாக வீட்டின் கழிவறையில் வெளியேறிய விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்தனர். இதுபோன்ற ஆபத்தான சூழ்நிலையில், பாதாள சாக்கடை பிரச்னையை சரிசெய்ய நகராட்சி நிர்வாகம் கூட முன்வரவில்லை. விழுப்புரம் நகரில் எம்.எல்.ஏ.,க்கள், அதிகாரிகள், வார்டு கவுன்சிலர்கள் உள்ள வீதிகளில் மட்டும், நகராட்சி அதிகாரிகள் தினந்தோறும் விசிட் அடித்து துாய்மையாக வைத்து கொள்வதில் கவனம் செலுத்துகின்றனர். மற்ற வீதிகள் பக்கமே வருவது கிடையாது. விழுப்புரம் நகராட்சி நிர்வாகம் பாதாள சாக்கடை வரியை கறாராக பெறுகிறது. ஆனால், சாக்கடை அடைப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வது எங்கள் வேலை கிடையாது என்பதுபோல் கண்டுகொள்ளமல் உள்ளது. எனவே, பாதாள சாக்கடை அடைப்பு காரணமாக வீடுகளுக்குள் விஷவாயு அதிகமாக வெளியேறி விபரீதங்கள் ஏற்படுவதிற்கு முன்பு, மாவட்ட நிர்வாகம், குடிநீர் வழங்கல் வாரியம், நகராட்சி நிர்வாகம் போர்கால நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
13-May-2025