பணி துவங்காத 13,897 பேருக்கு வழங்கிய தொகையை திரும்ப பெற முடிவு பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம்
வி ழுப்புரம் மாவட்டத்தில், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தில், பணிகளை துவக்காத பயனாளிகளிடம் அரசு நிதியை திரும்பப்பெற திட்டமிட்டுள்ளது. விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில், மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடந்தது. ரவிக்குமார் எம்.பி., தலைமையில் நடந்த கூட்டத்தில், 2025-26ம் நிதி ஆண்டில் முதல் காலாண்டுக்கான மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. சமூக பொருளாதார ஜாதி வாரியான கணக்கெடுப்பு மற்றும் ஆவாஸ் பிளஸ் கணக்கெடுப்பு பட்டியல்களின் அடிப்படையில், பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டத்தின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்யப்பட்டது. கடந்த 2016-17ம் ஆண்டு முதல் 2021-22ம் ஆண்டு வரை விழுப்புரம் மாவட்டத்திற்கு 68 ஆயிரத்து 612 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி, ஒரு பயனாளிக்கு 2.82 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 1936.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வீடுகள் கட்டித் தர இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில், 54 ஆயிரத்து 364 வீடுகள் பணி நிறைவு பெற்றுள்ளது என்றும், 351 வீடுகளின் கட்டுமானம் நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், ஒதுக்கீடு பெற்று வீடுகட்டுமானப் பணியை மேற்கொள்ளத் தவறிய 13 ஆயிரத்து 897 பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட அரசு நிதியை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்படுமென அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.