ஆவணங்கள், பதிவேடுகள் பராமரிக்காத விதை விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை; துணை இயக்குநர் எச்சரிக்கை
விழுப்புரம் : விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார் மாவட்டங்களில் ஆடிப்பட்டத்தில் சிறுதானிய பயிர்கள் சாகுடி செய்யும் விவசாயிகள் உரிமம் பெற்ற அரசு மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்களில் மட்டுமே வாங்க வேண்டும் என துணை இயக்குநர் சரவணன் தெரிவித்துள்ளார்.விழுப்புரம் விதை ஆய்வு துணை இயக்குநர் சரவணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு;விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார் மாவட்ட விவசாயிகள் வரும் ஆடிப்பட்டத்தில் மானாவரி சிறுதானிய பயிர்களையும், ஒரு சில இடங்களில் துவரை, உளுந்து, தட்டை பயிறுகள் சாகுபடி செய்வது வழக்கம். இந்த பயிர்களுக்கான விதைகளை, விதை வணிக உரிமம் பெற்ற அரசு, அரசு சார்பு மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்களில் மட்டுமே வாங்க வேண்டும். விதை பைகளில் உள்ள விபர அட்டை குறிப்பிலுள்ள விபரங்களை கண்டு, இந்த பட்டத்திற்கு உகந்த, காலாவதி நாள் கொண்ட விதைகளை வாங்க வேண்டும். இதை வாங்கும் போது, தவறாமல் விற்பனை ரசீது பெற வேண்டும். விதைக்கும் முன், மண்ணில் போதுமான ஈரப்பதம் உள்ளதை உறுதி செய்தபின் விதைக்க வேண்டும்.உணவு தானியம் விற்கும் கடைகளில் உள்ள தானியங்கள் உணவுக்காக மட்டுமே பயன்படுத்த கூடியது. இதை வாங்கி, விதைக்க கூடாது. அதில் போதுமான முளைப்பு திறன் இருக்காது. விபர அட்டை பொருத்திய விதைகளை வாங்க வேண்டும். விதை விற்பனையாளர்கள், தங்கள் நிறுவனத்தில் விதை இருப்பு, விலை விபர பட்டியல் பலகை வைக்க வேண்டும்.விதை கொள்முதல் செய்ததற்கான கொள்முதல் பட்டியல், விதைகளுக்கான பகுப்பாய்வு முடிவு அறிக்கை நகல், பதிவு சான்று, இருப்பு பதிவேடு, விற்பனை பட்டியல் ஆவணங்கள் தவறாமல் பராமரிக்க வேண்டும். விவசாயிகளுக்கு உரிய படிவத்தில் விற்பனை பட்டியல், விவசாயி கையெழுத்து பெற்று வழங்கி நகல் பராமரிக்க வேண்டும். ஆவணங்கள், பதிவேடுகள் பராமரிக்காத மற்றும் தரமற்ற விதைகளை விநியோகிக்கும் விதை உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.