தென்பெண்ணை ஆற்றில் பேரிடர் மீட்பு நேரடி செயல் விளக்க ஒத்திகை நிகழ்வு
விழுப்புரம்: விழுப்புரம் அருகே தென்பெண்ணை ஆற்றில் பேரிடர் மழை வெள்ள கால மீட்பு ஒத்திகை நடந்தது.விழுப்புரம் மாவட்டத்தில், கனமழை வெள்ளம், பேரிடர் கால மீட்பு குறித்த நேரடி செயல் விளக்க ஒத்திகை நிகழ்ச்சி, தென்பெண்ணை ஆற்றில் 5 இடங்களில் நேற்று மாலை நடந்தது. விழுப்புரம் அருகே தளவானுார் தென்பெண்ணை ஆற்றில் நடந்த நிகழ்ச்சிக்கு தாசில்தார் கனிமொழி தலைமை தாங்கினார்.தீயணைப்பு துறை உதவி மாவட்ட அலுவலர் ஜெயசங்கர், நிலைய அலுவலர் செல்வகுமார், கோலியனூர் பி.டி.ஓ., கார்த்திகேயன், துணை தாசில்தார் குணசேகரன், வருவாய் ஆய்வாளர் கதிர்வேல், கண்டமானடி ஆரம்ப சுகாதார நிலைய அலுவலர் பிரியாபத்மாசினி, டாக்டர்கள் விஷ்ணுகுமரன், கீர்த்தனா, தாலுகா இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் உள்ளிட்டோர் தலைமையிலான அரசு துறை அலுவலர் குழுவினர் பங்கேற்றனர். தளவானுார் ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டால், எப்படி எச்சரிக்கை விடுத்து, தண்ணீரில் மூழ்கியவர்களை காப்பாற்றுவது, கரைக்கு கொண்டு வருவது, மீட்கப்பட்டவர்களுக்கு மருத்துவ குழுவினர் முதலுதவி சிகிச்சையளிப்பதும், அதன் பிறகு அதிகம் பாதிக்கப்பபட்டவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்வது போன்ற ஒத்திகை நடந்தது.பேரிடர், மழை வெள்ள காலங்களில் நடப்பதை போல், ஒலிபெருக்கி எச்சரிக்கை விடுத்து, மீட்பு பணிகளை தீயணைப்பு, சுகாதாரம், காவல் துறை, வருவாய்த்துறையினர் நேரடி செயல் விளக்கமாக செய்ததது பரபரப்பையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தியது. பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.