விபத்து மீட்பு பணியில் மாவட்ட போலீசார் திணறல்! பேட்ரோல் வாகனம் இல்லாததால் அவலம்
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் விபத்து மீட்பு பணிகளை விரைவுப்படுத்த, புதிதாக மூன்று நெடுஞ்சாலை ரோந்து போலீஸ் வாகனங்கள் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விழுப்புரம் மாவட்டம் சென்னை மற்றும் தென் மாவட்டங்களை இணைக்கும் மைய பகுதியாக உள்ளது. இம்மாவட்டத்தின் வழியாக, சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை, விக்கிரவாண்டி - கும்பகோணம் - தஞ்சாவூர் (வி.கே.டி.,) தேசிய நெடுஞ்சாலை, திண்டிவனம் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை, விழுப்புரம் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை, விழுப்புரம் - மங்களூர் தேசிய நெடுஞ்சாலை, விழுப்புரம் - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலை, சென்னை - இ.சி.ஆர்., தேசிய நெடுஞ்சாலை மற்றும் திருக்கோவிலுார், திருவண்ணாமலை, ஆரணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கான மாநில நெடுஞ்சாலைகள் உள்ளன.மாவட்டத்தில் அதிக அளவில் தேசிய நெடுஞ்சாலை, மாநில சாலைகள் இருப்பதால், அதிகளவில் சாலை விபத்துக்கள் நடக்கிறது. மாநில அளவில் விழுப்புரம் அதிகளவில் சாலை விபத்துக்கள் நடக்கும் மாவட்டமாக உள்ளது. சாலை விபத்துக்களை தடுக்கவும், விபத்தில் சிக்கும் வாகனங்களை துரிதமாக மீட்டு, காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்புவதும், போக்குவரத்து ஒழுங்குப்படுத்த ஹைவே பேட்ரோல் (ரோந்து) வாகனங்கள் உள்ளன. சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஓங்கூர் முதல் சித்தானங்கூர் வரையில் 3 நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் உள்ளன. திண்டிவனம்- புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலை, திண்டிவனம் - திருவண்ணாமலை சாலையில் எஸ்.மங்கலம் வரையிலும், விழுப்புரம் - ஆரணி சாலையில் வளத்தி வரையிலும், விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் வடமங்கலம், முண்டியம்பாக்கத்தில் இருந்து வழுதாவூர் வரை, இ.சி.ஆரில் கோட்டக்குப்பத்தில் இருந்து கூனிமேடு வரை மற்றும் தாழங்காடு வரை ரோந்து வாகனங்கள் இயக்கப்படுகின்றன. கும்பகோணம், தஞ்சாவூர் வி.கே.டி., சாலை, விழுப்புரம் - திருக்கோவிலுார் சாலை, விழுப்புரம் - திருவண்ணாமலை சாலையில் மாவட்ட காவல் துறை சார்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தற்காலிகமாக ஹைவே பேட்ரோல் வாகனங்கள் இயக்கப்பட்டன. இந்த வாகனங்களுக்கு அரசு சார்பில் எரிபொருள் ஒதுக்கீடு செய்யவில்லை. மற்ற வாகனங்களின் எரிபொருளை பிரித்து பயன்படுத்தினர். இதில் குளறுபடி ஏற்பட்டதால் 3 ஹைவே வாகனங்களும் நிறுத்தப்பட்டது. இதனால் சாலை விபத்து ஏற்படும்போது, மீட்பு பணி மேற்கொள்வதில் கடும் சிரமம் ஏற்பட்டுகிறது. விபத்து மீட்பு பணிக்கு, அருகில் மற்ற பகுதி ரோந்து வாகனம் வரும் நிலை உள்ளது. மீட்பு பணியிலும் தொய்வு ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்பு, விபத்தில் சிக்கியவர்கள் உயிரிழக்கும் நிலை உள்ளது. 3 நெடுஞ்சாலைகளுக்கும், புதிதாக ஹைவே பேட்ரோல் வாகனங்கள் ஒதுக்கீடு செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.