ரூ.22.90 கோடி ஈவுத்தொகை காசோலை
ரெப்கோ வங்கி மத்திய அமைச்சரிடம் வழங்கல்விழுப்புரம்: ரெப்கோ வங்கி சார்பில் மத்திய அமைச்சரிடம் ரூ.22.90 கோடி ஈவுத்தொகைக்கான காசோலை வழங்கப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய அரசு நிறுவனமான ரெப்கோ வங்கி தலைவர் சந்தானம், வங்கி இயக்குநர் மற்றும் ரெப்கோ வீட்டு வசதி நிறுவன தலைவருமான தங்கராஜூ, வங்கி நிர்வாக இயக்குநர் கோகுல் ஆகியோர் மத்திய அரசின் பங்கு மூலதனமான ரூ.76.32 கோடிக்கான 2024-25ம் நிதியாண்டின் 30 சதவீத ஈவுத் தொகை ரூ.22.90 கோடிக்கான காசோலையை டில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் வழங்கினர். அப்போது மத்திய உள்துறை செயலர் கோவிந்த் மோஹன், எல்லை மேலாண்மை மற்றும் எப்.எப்.ஆர்., பிரிவு செயலர் ராஜேந்திர குமார், வங்கி நிர்வாக குழு உறுப்பினர்களான மத்திய உள்துறை அமைச்சகத்தின் எப்.எப்.ஆர்., பிரிவு இணை செயலர் பிரசன்னா, ஆர்.எட்ச்.எஸ்., பிரிவு இணை செயலர் மக்கன் லால் மீனா உடனிருந்தனர். இந்த 30 சதவீதம் ஈவுத்தொகையானது வங்கியின் வரலாற்றில் மிக அதிகமானதாகும். மேலும் ரெப்கோ வங்கி கடந்த 2024-25 ஆம் நிதியாண்டில் ரூ.140 கோடி நிகர லாபம் ஈட்டி மைல்கல் சாதனை படைத்தது. வங்கி வளர்ச்சியை பாராட்டிய மத்திய உள்துறை அமைச்சர், வங்கி தனது திறன், அர்ப்பணிப்பு மற்றும் தொழில்முறை செயல்பாடுகள் மூலம் கூட்டுறவுத்துறைக்கு உத்வேகம் அளிக்கும் ஒரு நிறுவனமாக திகழ்கிறது என்றார்.