வாகனங்களை வழிமறித்து போதை ஆசாமி அலம்பல்
விழுப்புரம்: விழுப்புரத்தில் போலீசை கண்டித்து, மது போதையில் வாகனங்களை தடுத்து தொழிலாளி அலம்பலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. விழுப்புரம் நேருஜி சாலையில், வீரவாழிமாரியம்மன் கோவில் சிக்னல் சந்திப்பு அருகே நேற்று மாலை 4:30 மணிக்கு, குடிபோதையில் சட்டையின்றி வந்த தொழிலாளி ஒருவர், நெடுஞ்சாலையின் நடுவே நின்றுகொண்டு பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டார். தொடர்ந்து அந்த ஆசாமி, அழுதபடி சாலையின் மையத்தில் நின்று கொண்டு அவ்வழியாக வந்த அரசு பஸ்சை வழிமறித்து, அதன் முன்பு படுத்துக்கொண்டார். அவரை அங்கிருந்தவர்கள் அகற்ற முயன்றபோது, தாக்க முயன்றார். இதனையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை துாக்கி ஓரம் கட்டினர். விசாரித்ததில், விழுப்புரம் சாலாமேடு பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி என்பதும், அவருக்கு சொந்தமான 4 மாடுகள் கடந்த 2 மாதத்திற்கு முன்பு காணாமல் போனதாகவும், இதுகுறித்து, விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், வேதனை தாங்க முடியாமல், மது குடித்ததாகவும், போலீசார் தன்னை ஏமாற்றி வருவதாகவும் தெரிவித்தார். இதனால், விழுப்புரம்-புதுச்சேரி சாலையில், சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது .